மீண்டும் சர்ச்சையில் வைரமுத்து.. சின்மயியை தொடர்ந்து மற்றுமொரு பாடகி பரபரப்பு புகார்
கவிஞர் வைரமுத்து மீது சின்மயி பாலியல் குற்றச்சாட்டு கூறி வரும் நிலையில், மீண்டும் விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கி உள்ளது.
தமிழ் சினிமாவின் புகழ்பெற்ற பாடலாசிரியராக வலம் வருபவர் கவிஞர் வைரமுத்து. 1980-ல் வெளியான ‘நிழல்கள்’ படத்தின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து பல படங்களில் பாடல்களை எழுதியுள்ளார். இந்த நிலையில் வைரமுத்துவுக்கு சமீபத்தில் கள்ளிக்காட்டு இதிகாசம் புதினத்துக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றார். அதற்காக அவரை கௌரவிக்கும் விதத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் ‘கனவு இல்லம்’ திட்டத்தின் கீழ் வீடு வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
இதனிடையே பாடலாசிரியர் வைரமுத்து குறித்து பாடகி சின்மயி மீடூ புகார் தெரிவித்து இருந்தார். தொடர்ச்சியாக சமூக வலைதளங்களில் அவரை விமர்சித்துவருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன் சின்மயி தனது ட்விட்டர் பக்கத்தில், “முதல்வர் மு.க.ஸ்டாலின், திமுக எம்பி கனிமொழி ஆகியோரைக் குறிப்பிட்டு பிரிஜ் பூஷணுக்கும் வைரமுத்துவுக்கும் விதிகள் வேறு கிடையாது. நமது நாட்டின் சாம்பியன்கள், மல்யுத்த வீரர்கள் பிரிஜ் பூஷணின் பெயரைக் கூறினார்கள். அதே போல 17க்கும் பெண்கள் வைரமுத்துவின் பெயரைக் குறிப்பிட்டுள்ளார்கள். உங்களுக்கும் உங்கள் கட்சிக்கும் நெருக்கமானவர். எங்கள் அனைவரது திறமையை விட வைரமுத்து திறமை பெரிதொன்றும் இல்லை” என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் பாடகி புவனா சேஷன் என்பவரும் வைரமுத்துவுக்கு எதிராக பேசியுள்ளார். இதுதொடர்பாக புவனா சேஷன் ஏஎன்ஐ செய்திக்கு அளித்த பேட்டியில், ’ஏறக்குறைய 17 பெண்கள் வைரமுத்துவிற்கு எதிராக குற்றஞ்சாட்டியுள்ளனர். ஆனால் அதில் 4 பேர் மட்டுமே தைரியமாக தங்களது முகத்தையும், பெயரையும் வெளிக்காட்டியுள்ளனர்.
நான் என் கதையை வெளியே சொல்வது இளம் பாடகர்களின் கனவுகள் உடையக்கூடாது என்பதற்காகத்தான். மற்ற பெண்களுக்கும் இது நேரக்கூடாது என்பதற்காகவே இதனை பகிர்கிறேன். பாடகி சின்மயி உடைய தைரியம் வியக்க வைக்கிறது. வைரமுத்து மீது அவர் குற்றச்சாட்டு வைத்ததால் சமூக வலைதளங்களில் பலரும் அவரை தொடர்ச்சியாக வசை பாடினர்.
பல பெண்கள் இதனால் பாதிக்கப்படக்கூடாது. வைரமுத்துவுக்கு எதிராக எந்த விசாரணையும் நடைபெறபோவதில்லை. சிஸ்டம் அப்படி நடைபெறவிடாது. பாதிக்கப்பட்ட பெண்கள் சின்மயி போன்று தைரியமாக வெளியில் சொல்ல வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.