பிரபல நடிகர் வீடு மீது துப்பாக்கியால் சுட்ட இருவர் கைது.. போலீசார் தீவிர விசாரணை

 

பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் வீட்டு முன்பு துப்பாக்கிச் சூடு நடத்திய 2 நபர்களை மும்பை போலீசார் கைது செய்துள்ளனர்.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள கேலக்ஸி அடுக்குமாடி குடியிருப்பில் நடிகர் சல்மான் கானின் வீடு உள்ளது. இந்த அடிக்குமாடி குடியிருப்பின் வெளிப்பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று 2 இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றது. இந்த சம்பவம் திரையுலகினர் மற்றும் மும்பை நகரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

நடிகர் சல்மான் கானுக்கு ஏற்கெனவே ‘ஒய் பிளஸ்’ பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த சம்பவத்தை தொடர்ந்து அவரது வீட்டு முன்பு கூடுதல் போலீஸ் பணியமர்த்தபப்ட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்தனர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், மர்ம நபர்கள் தங்கள் முகங்களை மூடியிருந்ததாகவும், இந்த சம்பவம் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட ஒன்று எனவும் தெரிவித்தனர். மேலும், குற்றவாளிகள் மொத்தம் 4 ரவுண்டுகள் சுட்டதாகவும். சம்பவ இடத்திலிருந்து தோட்டக்கள் மீட்கப்பட்டதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையே, சிறையில் அடைக்கப்பட்ட ரவுடி லாரன்ஸ் பிஷ்னோயின் சகோதரர் அன்மோல் பிஷ்னோய் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு பொறுப்பேற்பதாகக் கூறும் ஃபேஸ்புக் பதிவு ஒன்று கண்டறியப்பட்டது. இதன் ஐபி (இன்டர்நெட் புரோட்டோகால்) முகவரி போர்ச்சுகலில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக இந்த வழக்கை விசாரிக்கும் போலீஸ் அதிகாரி நேற்று தெரிவித்தார். அந்த பதிவில், ‘இது முதல் மற்றும் கடைசி எச்சரிக்கை’ என்றும் குறிப்பிடப்பட்டிருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.