ஜெயிலர் படத்தின் மூலம் அறிமுகமாகும் பிரபல ஸ்டண்ட் இயக்குநர் மகன்.. ரஜினிகாந்த் வாழ்த்து!!

 

ஜெயிலர் படத்தின் மூலம் முன்னணி ஸ்டண்ட் இயக்குநர்களில் ஒருவரான ஸ்டண்ட் சிவாவின் மகன் கெவின் குமார் ஸ்டண்ட் இயக்குநராக அறிமுகம் ஆகிறார்.

‘அண்ணாத்த’ படத்திற்கு பிறகு ரஜினிகாந்த் நடித்துள்ள படம் ‘ஜெயிலர்’. இந்தப் படத்தை கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் ரஜினிகாந்திற்கு ஜோடியாக தமன்னா நடித்துள்ளார். இந்தப் படத்தில், மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். முத்துவேல் பாண்டியன் என்ற வேடத்தில் ரஜினி நடித்து வருகிறார். அதிரடி சண்டை படமாக தயாராகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. இந்தப் படம், வரும் ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

இந்த நிலையில், ஜெயிலர் படத்தின் முதல் பாடல் கடந்த 6-ம் தேதி வெளியானது. அனிருத் இசையில் அருண் ராஜா காமராஜ் எழுதியுள்ள காவாலா என்ற பாடல் தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. இந்த பாடல் குறித்து விமர்சனங்கள் அதிகம் இருந்தாலும் அதே அளவுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறவும் தவறவில்லை. இதனையடுத்து இந்தப் படத்திலிருந்து ஹுக்கும் என்ற பாடல் வருகிற 17-ம் தேதி வெளியாகிறது.

இந்தப் படத்தில் தமிழ் திரையுலகின் முன்னணி ஸ்டண்ட் இயக்குநர்களில் ஒருவரான ஸ்டண்ட் சிவாவின் மகன் கெவின் குமார் ஸ்டண்ட் இயக்குநராக அறிமுகமாகிறார். சண்டைக் காட்சிகளை வடிவமைத்த கெவின் குமார் நேர்த்தியை பார்த்து வியந்துபோன ரஜினிகாந்த், அவரை பாராட்டியதுடன் எதிர்காலத்தில் தமிழ் சினிமாவில் சிறந்த ஸ்டண்ட் இயக்குநராக வரவேண்டும் என ஆசிகளையும் வழங்கியுள்ளார்.

இவர் கடந்த பல வருடங்களாகவே தனது தந்தையுடன் இணைந்து தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் ஆக்சன் காட்சிகளில் பணியாற்றியதுடன் அதன் நுணுக்கங்களையும் கற்றுக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.