லியோ படத்திற்கு அடுத்த சிக்கல்.. இந்து மகா சபை பரபரப்பு புகார்

 

லியோ டிரெய்லர் வெளியான நிலையில் படக்குழு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை காவல் ஆணையரிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘வாரிசு’ படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் நடித்துள்ள படம் ‘லியோ’. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ளார். மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பின்னர் விஜய்யும், லோகேஷும் மீண்டும் இணைந்து உள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார். பிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்துள்ளார். இந்த படத்தில் நடிகர் அர்ஜுன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், நடிகை த்ரிஷா, நடிகை பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், இயக்குநர் மிஸ்கின், இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன், டான்ஸ் மாஸ்டர் சாண்டி, மலையாள நடிகர் மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ‘லியோ’ திரைப்படம் அக்டோபர் மாதம் 19-ம் தேதி வெளியாக உள்ளது. சமீபத்தில் இப்படத்தின் இரண்டாவது பாடலான ‘BADASS’ பாடலின் லிரிக் வீடியோ வெளியாகி அதிவேகமாக வைரலானது. இந்த நிலையில் லியோ படத்தின் டிரெய்லர் கடந்த 5-ம் தேதி மாலை 6.30 மணிக்கு வெளியாகி வரவேற்ப்பை பெற்றது.

இதனை தொடர்ந்து லியோ படக்குழு மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்று அளிக்கப்பட்டுள்ளது. அகில் பாரத் இந்து மகா சபா சார்பில் வழக்கறிஞர் ரமேஷ்பாபு அளித்த மனுவில், லியோ பட டிரைலரில் விஜய் பேசிய வசனம் மிகவும் ஆபாசமாகவும், அருவருக்கத்தக்க வகையில் இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

இது கலாசார சீரழிவை ஏற்படுத்துவதுடன், குழந்தைகள் மனதில் நஞ்சை விதைப்பதாகவும் கூறியுள்ள அவர், ஆபாசமான மற்றும் கொச்சையான வார்த்தைகளை படக்குழு நீக்க வேண்டும் எனவும், தவறினால் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.