சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள ‘பத்து தல’ படத்தின் இசை வெளியீட்டு தேதி அறிவிப்பு!!

 

சிம்பு நடிப்பில் வெளியாக உள்ள ‘பத்து தல’ படத்தின் ஆடியோ வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2017-ம் ஆண்டு கன்னடத்தில் சிவ ராஜ்குமார், ஸ்ரீ முரளி நடிப்பில் வெளியான ‘மஃப்டி’ படம் சூப்பர் ஹிட் அடித்து வசூல் சாதனையும் செய்தது. இப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை வாங்கியுள்ள ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா, சிவ ராஜ்குமார் கேரக்டரில் சிம்புவும், ஸ்ரீ முரளியாக கெளதம் கார்த்திக்கையும் நடிக்க ஒப்பந்தம் செய்தார்.

இந்தப் படத்தை ‘சில்லுனு ஒரு காதல்’, ‘நெடுஞ்சாலை’ படங்களின் மூலம் கவனம் ஈர்த்த ஓபிலி கிருஷ்ணா இயக்கிறார். இந்தப் படத்தில் பிரியா பவானி சங்கர், கௌதம் மேனன், டீஜய் அருணாசலம், கலையரசன், ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படம் இம்மாத இறுதியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தின் முதல் சிங்கிளான ‘நம்ம சத்தம்’ கடந்த பிப்ரவரி மாதம் வெளியானது. இந்நிலையில் ‘பத்து தல’ படத்தின் இரண்டாவது சிங்கிள் ‘நினைவிருக்கா’ பாடல் 13-ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகி வரவேற்பு பெற்றுள்ள நிலையில், படத்தின் புரமோஷன் பணிகளில் படக்குழுவினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில், சிம்பு மற்றும் கௌதம் கார்த்திக் நடித்துள்ள ‘பத்து தல’ படத்தின் ஆடியோ வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா மார்ச் 18-ம் தேதி சென்னையில் நடக்க உள்ளது. இந்த நிகழ்விற்கான சிறப்பு விருந்தினர் யார் என இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றாலும், கமல்ஹாசன் முக்கிய விருந்தினராக கலந்துக் கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


முன்னதாக வெளியான 'பத்து தல' படத்தின் டீசர், படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. இந்தப் படத்தின் டிரைலர் ஆடியோ வெளியீட்டிற்குப் பிறகு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிலம்பரசன் தாய்லாந்தில் ஒரு மாதத்திற்கும் மேலாக இருக்கிறார். அவரை படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பார்க்க ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள் ரசிகர்கள்.