லோகேஷ் கனகராஜ் தயாரிக்கும் முதல் படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு!
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தயாரிக்கும் முதல் படத்துக்கு ‘பைட் கிளப்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது
2017-ல் வெளியான ‘மாநகரம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகிமானவர் லோகேஷ் கனகராஜ். அதனைத் தொடர்ந்து கார்த்தி நடிப்பில் வெளியான ‘கைதி’ படத்தின் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். ரசிகர்கள் மத்தியில் யார் இந்த லோகேஷ் என்ற தேடல் உருவானது. அந்த படத்தை தொடர்ந்து அவரது அடுத்த படம் ‘கைதி’ படத்தின் 2-ம் பாகம் வெளியாகும் என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவியது.
இந்த நிலையில், விஜய் நடிப்பில் வெளியான ‘மாஸ்டர்’ படத்தை இயக்கினார். இந்த படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்து ரசிகர்களை மேலும் கவர்ந்தார். இதைத்தொடர்ந்து கமல் நடிப்பில் வெளியான ‘விக்ரம்’ படத்தை இயக்கி, மேலும் பட்டிதொட்டி எங்கும் லோகேஷ் கனகராஜை தெரியாத ஆட்கள் இருக்க முடியாது என்ற அளவுக்கு பெயர் பெற்றார். பெரும் வரவேற்பை பெற்ற இந்த படமானது ‘கைதி’ படத்துடன் இணைந்த கதையாக அமைந்துள்ளது. இதனால் 'லோகேஷ் சினிமட்டிக் யுனிவர்ஸ்' (LCU) என்று ரசிகர்கள் பாராட்டி வந்தனர்.
அன்மையில் விஜய் நடிப்பில் வெளியான ‘லியோ’ படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ரூ. 500 கோடிக்கு மேல் வசூலை குவித்தது. இதைத்தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ், ரஜினியின் 171-வது படத்தை இயக்கி வருகிறார்.
இந்த நிலையில் 'ஜி ஸ்குவாட்' என்ற புதிய தயாரிப்பு நிறுவனத்தை லோகேஷ் தொடங்கியுள்ளார். இதுகுறித்து கூறும்போது, நெருக்கமான நண்பர்கள் மற்றும் உதவி இயக்குனர்களின் படைப்பாற்றலை ஊக்குவிக்கும் வகையில் முதல் சில தயாரிப்புகள் அமையும் என்று தெரிவித்திருந்தார்.
இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 'பைட் கிளப்' திரைப்படம் டிசம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.