பிரபல பாடகி தொடையில் பாய்ந்த துப்பாக்கிக் குண்டு.. மேடையில் பாடிக்கொண்டிருக்கும் போது நடந்த பயங்கரம்!

 

பிரபல போஜ்புரி பாடகியான நிஷா உபாத்யாய் துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநில்ம சரண் மாவட்டத்தில் உள்ள கவுர் பசந்த் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபல போஜ்புரி பாடகி நிஷா உபாத்பாய். பாட்னாவில் வசித்து வரும் நிஷா, பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகளில் பங்கேற்று பாடல்களை பாடி வருகிறார். இவரது நாட்டுப்புறப் பாடல்களுக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

இந்த நிலையில் சரண் மாவட்டத்தில் உள்ள செந்துவார் கிராமத்தில் உபநயன் விழாவில் பாடுவதற்காக நேற்று முன்தினம் இரவு பாடகி நிஷா உபாத்யாய் வந்தார். அதிகாலை வரை நிகழ்ச்சி நடைபெற்றதாக கூறப்படுகிறது. வீரேந்திசிங் என்பவரது வீட்டில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பாடகி நிஷா பாடிக்கொண்டிருந்தார். 

அப்போது கூட்டத்தில் இருந்த இளைஞர் ஒருவர், திடீரென துப்பாக்கியால் சுட்டார். இதில் பாடகி நிஷாவின் இடது தொடையில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்தது. இதில் படுகாயமடைந்த அவர் மேடையிலேயே மயங்கி விழுந்தார். உடனடியாக அங்கிருந்தவர்கள் நிஷாவை மீட்டு பாட்னாவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

அங்கு அவருக்கு நேற்று அறுவை சிகிச்சை மூலம் தொடையில் இருந்த தோட்டாவை மருத்துவர்கள் அகற்றினர். தற்போது பாடகி நிஷா நல்ல நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து ஜனதா பஜார் காவல் நிலைய போலீசார் கூறுகையில், “இந்த சம்பவம் குறித்து காவல் நிலையத்துக்கு எந்தத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை. எங்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.” என்றனர்.