கர்ணனை போல வாரி வழங்கிய பிரபல இசையமைப்பாளர்.. 6 நரிக்குறவ குடும்பங்களுக்கு உதவி செய்த டி.இமான்!

 

நெய்வேலியில் வீடின்றி கஷ்டப்பட்ட நரிக்குறவர் குடும்பங்களுக்கு ஆறு வீடுகள் கட்டிக்கொடுத்து  இசையமைப்பாளர் டி.இமான் உதவி செய்து இருக்கிறார்.

2001-ல் விஜய் நடிப்பில் வெளியான ‘தமிழன்’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் டி.இமான். தொடர்ந்து விசில், கிரி, தலை நகரம், திருவிளையாடல் ஆரம்பம், மைனா, கும்கி, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ஜில்லா, விஸ்வாசம் உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராக உருவெடுத்தார். தமிழ் மட்டுமின்றி கன்னடம், மலையாளம், தெலுங்கு மற்றும் இந்தி பட படங்களில் இசையமைத்திருக்கிறார்.

மோனிகா ரிச்சர்டு என்பவரை திருமணம் செய்துகொண்ட இமானுக்கு இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில், அவருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக அவர்கள் இருவரும் தங்களது 13 ஆண்டு திருமண வாழ்க்கையை முறித்து விவாகரத்து பெற்று பிரிந்தனர். மோனிகாவை விவாகரத்து செய்த பின்னர் அமீலா என்பவரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். 

இந்த நிலையில், நெய்வேலியில் 6 நரிக்குறவர் குடும்பங்களுக்கு குடிசை வீடுகளை கட்டிக் கொடுத்து இசையமைப்பாளர் டி இமான் உதவி இருக்கிறார்.

கடலூர் மாவட்டம் நெய்வேலி மந்தாரக்குப்பம் அருகே உள்ள பெரியாக்குறிச்சி பகுதியில் 30 க்கும் மேற்பட்ட நரிக்குறவர் குடும்பங்கள் பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். இவர்கள் தங்கியுள்ள வீடுகள் அனைத்தும் முற்றிலும் சேதம் அடைந்த காணப்பட்டது. இந்நிலையில் இதுகுறித்து தகவல் சமூக ஆர்வலரான செல்வம் உமா மூலம் தகவல் அறிந்த இசையமைப்பாளர் இமான் ரூபாய் இரண்டு லட்சம்  மதிப்பீட்டில் அப்பகுதியிலுள்ள ஆறு குடும்பங்களுக்கு  குடிசை வீடுகள் சீரமைத்து மூன்று வீடுகளுக்கு தார்பாய்கள் மற்றும் மாணவர்களுக்கு இரவு நேர பாடசாலை தொடங்கி வைத்து நோட்டு புத்தகங்கள் வழங்கினார்.

தொடர்ந்து அப்பகுதி நரிக்குறவர் இன மக்கள் அவருக்கு மணி மாலைகளை அணிவித்து தங்களுடைய மரியாதை செலுத்தினர். அப்பகுதி மக்களின் வேண்டுகோளை ஏற்று அஜித் நடித்த விசுவாசம் படத்தில் இடம்பெற்ற கண்ணான கண்ணே என்ற பாடலை பாடினார். அப்பகுதி  பெண்கள் இமானுடன் செல்ஃபி எடுத்தனர் மகிழ்ந்தனர்.

பின்னர்  செய்தியாளர்களை சந்தித்த இமான் கூறியதாவது : நான் இப்பகுதிக்கு சமூக ஆர்வலராக தான் வந்துள்ளேன் எனக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது. நான் டி இமான் என்கின்ற தொண்டு அறக்கட்டளை கடந்த மூன்று ஆண்டுகளாக நடத்தி வருகிறேன். நான் இப்பகுதி மக்களுக்கு குடிசை வீடுகள் மற்றும் பாடசாலைகள் அமைத்து கொடுத்துள்ளேன்.

நான் சிறுவயதில் இருந்து இசையில் ஈடுபாடு உள்ளவன் சின்னத்திரையில் அறிமுகமாகி பெரிய திரை வரை வந்து நூற்றுக்கு மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளேன் தேசிய அளவில் விருதுகள் கலைமாமணி விருது ஆகியவற்றைப் பெற்று உள்ளேன் இது எனக்கு இறைவன் போட்ட பிச்சையாக தான் நான் கருதுகிறேன்.

 நான் கிறிஸ்துவ மதத்தைச் சார்ந்தவன் நான் மதம் பரப்புவதற்காக இங்கு வரவில்லை. நான் சம்பாதிப்பதில் பத்தில் ஒரு பங்கு இறைப்பணியாக எடுத்து செலவு செய்து வருகிறேன் இந்தப் பணிகள் எல்லாம் நான் இறைப்பணியாக தான் பார்க்கிறேன். சாதி மதம் இனம் வேறுபாடு இல்லாமல் தான் இந்த சமூக சேவையை தொடர்ந்து செய்து வருகிறேன் என்று  பேசினார்.