‘ருத்ரன்’ படத்திற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்... சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

 

நடிகர் ராகவா லாரன்ஸ் நடித்துள்ள ‘ருத்ரன்’ படத்தை வெளியிடுவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் நடிகர், நடன இயக்குநர், இயக்குநர் என பல துறைகளில் இயங்கி வருபவர் ராகவா லாரன்ஸ். இவருடைய அடுத்த படம் ‘ருத்ரன்’. இந்தப் படத்தில் ராகவா லாரன்ஸ்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர்  நடிக்கிறார். பொல்லாதவன், ஆடுகளம், ஜிகர்தண்டா போன்ற படங்களைத் தயாரித்த தயாரிப்பாளர் ஃபைவ் ஸ்டார் கதிரேசன் இந்த படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

இந்த படத்தில் முக்கியமான வேடத்தில் நடிகர் சரத்குமார் நடித்துள்ளார். இந்த படத்தில் வில்லனாக பூமி எனும் கதாபாத்திரத்தில் சரத்குமார் நடிக்கிறார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய, ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாள மொழிகளில் உருவாகும் இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் கையில் ஆயுதத்துடன் ராகவா லாரன்ஸ் ஆக்ரோஷமாக நிற்க, அவரால் தாக்கப்பட்ட பலர் கீழே விழுந்து கிடப்பது போல, லாரன்ஸ்க்கே உரித்தான ஸ்டைலில் வெளியாக அது முதல் எதிர்பார்ப்பு நிலவியது. அதற்கேற்ப சில தினங்கள் முன் இதன் டிரெய்லரும் வெளியாகி வரவேற்பை பெற்றது.

படம் வரும் 14-ம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது ஏப்ரல் 24-ம் தேதி வரை படத்தை வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது. படத்தின் இந்தி உள்ளிட்ட வடமொழிகளின் டப்பிங் உரிமையை ரெவன்ஸா குளோபல் வென்சர்ஸ் என்ற நிறுவனம் பெற்றிருந்தது. டப்பிங் உரிமைக்காக ரூ.12.25 கோடிக்கு பட தயாரிப்பு நிறுவனத்துடன் அந்நிறுவனம் ஒப்பந்தம் செய்திருந்தது.

இதற்காக முன்பணமாக ரூ.10 கோடி செலுத்தியதாக சொல்லப்படுகிறது. ரூ.10 கோடி செலுத்திய நிலையில், மேலும் ரூ.4.50 கோடி கேட்டு ஒப்பந்தத்தை தயாரிப்பு நிறுவனம் ரத்து செய்தது. இதையடுத்து, ரெவன்ஸா குளோபல் நிறுவனத்தின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் ருத்ரன் திரைப்படத்தை ஏப்ரல் 24-ம் தேதி வரை வெளியிட தடை விதித்து உத்தரவிட்டது.

இந்த தடையை நீக்கக்கோரி படத்தின் தயாரிப்பு நிறுவனமான பைவ் ஸ்டார் நிறுவனம் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, படத்தின் இந்தி மற்றும் பிற வடமொழிகளின் டப்பிங் உரிமையை வேறு யாருக்கும் வழங்கக் கூடாது என்றும், இந்த பிரச்சினையை மத்தியஸ்தர் மூலமாக தீர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் நீதிபதி தெரிவித்தார்.

இதையடுத்து டப்பிங் உரிமை குறித்து எவ்வித முடிவும் எடுக்கப்படாது என தயாரிப்பாளர் தரப்பு உத்தரவாதம் அளித்ததை ஏற்று, ‘ருத்ரன்’ படத்தை திரையரங்கம், ஓ.டி.டி. மற்றும் சாட்டிலைட் ஆகியவற்றில் வெளியிடுவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி நீதிபதி உத்தரவிட்டார். இதன் மூலம் திட்டமிட்டபடி ‘ருத்ரன்’ திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.