‘தளபதி 68’ படத்தின் சூப்பர் அப்டேட்.. இவர்தான் தயாரிப்பாளர்.. தெலுங்கு பட இயக்குநரா?

 

‘தளபதி 68’ படத்தை சூப்பர் குட் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பது உறுதியாகிவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

‘வாரிசு’ படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வரும் படம் ‘லியோ’. இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கிறார். மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பின்னர் விஜய்யும், லோகேஷும் மீண்டும் இணைந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். பிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்கிறார். இந்த படத்தில் நடிகர் அர்ஜுன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், நடிகை த்ரிஷா, நடிகை பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், இயக்குநர் மிஸ்கின், இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன், டான்ஸ் மாஸ்டர் சாண்டி, மலையாள நடிகர் மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரைத் தொடர்ந்து சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தின் முக்கிய சண்டைக்காட்சி ஒன்று தற்போது படமாக்கப்பட்டு வருகிறதாம். இந்தப் படத்தின் டீசர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு வருகிற ஜுன் 22-ம் தேதி வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தளபதி விஜய்யின் 68 வது படத்தை தயாரிக்க பட தயாரிப்பு நிறுவனங்கள் போட்டி போட்டு வருகின்றன. குறிப்பாக சூப்பர் குட் ஃபிலிம்ஸ் மற்றும் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் ‘தளபதி 68’ படத்தை தயாரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி ‘தளபதி 68’ திரைப்படத்தை சூப்பர் குட் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கின்றன.

ஏற்கனவே விஜய் நடித்த ’ஜில்லா’ படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரித்திருந்தது என்பதும் அதற்கு முன்னர் விஜய் நடித்த ‘பூவே உனக்காக’, ‘லவ் டுடே’, ‘துள்ளாத மனமும் துள்ளம்’, ‘ஷாஜகான்’, ’திருப்பாச்சி’ ஆகிய படங்களையும் இந்நிறுவனம் தயாரித்திருந்தது.

இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் விஜய் படத்தை சூப்பர் குட் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்தப் படம் அந்த நிறுவனத்திற்கு 100வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதே நேரத்தில் இந்த படத்தை அட்லி இயக்க வாய்ப்பு இல்லை என்றும் வேறொரு பிரபல இயக்குனர் இயக்க இருப்பதாகவும் இது குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.