விடாமுயற்சி படத்தின் சூப்பர் அப்டேட்.. ஓடிடி உரிமத்தை கைபற்றியது Netflix!

 

அஜித் நடித்து வரும் ‘விடாமுயற்சி’ படத்தின் ஓடிடி உரிமத்தை நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றி இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

அஜித் நடிப்பில் கடைசியாக வெளியான ‘துணிவு’ படம் போட்டியாக களமிறங்கிய வாரிசு படத்தைவிடவும் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. அந்தப் படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோதே தனது 62வது படத்தில் நடிக்க கமிட்டானார். விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தது. ஆனால் அவர் படத்திலிருந்து வெளியேற மகிழ் திருமேனி தனது கதையுடன் இந்தப் படத்துக்குள் வந்தார்.

ஆக்‌ஷன் மற்றும் த்ரில்லர் ஜானரில் மகிழ் திருமேனி கில்லி என்பதால் அஜித்தை வைத்து அவர் எந்த மாதிரியான ஆக்‌ஷன் படத்தை கொடுக்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு கடந்த வருடம் மே 1-ம் தேதி படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டது. அதன்படி படத்துக்கு ‘விடாமுயற்சி’ என்று பெயர் வைக்கப்பட்டிருந்தது.

படத்தின் பெயர் அஜித் ரசிகர்களில் ஒருதரப்பினருக்கு பெரிதாக திருப்தியை கொடுக்கவில்லை என்பதே உண்மை. படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டதோடு சரி, அதற்கு பிறகு படத்திலிருந்து எந்தவிதமான அப்டேட்டும் வெளியாகாமல் இருந்தது. இதனால் ரசிகர்கள் சோர்வடைந்தனர். அதேசமயம் படத்தின் ஷூட்டிங் அஜர்பைஜானில் தொடங்கி நடந்து வருவதாக அவ்வப்போது தகவல்கள் வெளியாகின. அதுகுறித்தும் எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

ஆனால் படத்தின் ஒளிப்பதிவாளராக முதலில் பணியாற்றிய நீரவ் ஷா ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டார். படத்தின் ஷூட்டிங் மும்முரமாக நடந்துவந்த சூழலில் மகிழ் திருமேனிக்கும், நீரவ் ஷாவுக்கும் மீட்டர் ஒத்துப்போகாததால் தற்போது அவருக்கு பதில் ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவாளராக பணியாற்றிவருகிறார். இதில் அஜித்துடன் திரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஷூட்டிங் ஸ்பாட்டில் அவர்களை அஜித் எடுத்த புகைப்படங்களும் வெளியாகி ட்ரெண்டாகின.

இந்நிலையில் விடாமுயற்சி படத்தின் சூப்பர் அப்டேட் ஒன்றை லைகா நிறுவனம் அறிவித்திருக்கிறது. அதன்படி விடாமுயற்சி படத்தின் ஓடிடி உரிமத்தை நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியிருப்பதாக கூறப்பட்டுள்ளது. தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளின் உரிமத்தை அந்நிறுவனம் பெற்றிருப்பதாகவும், திரையரங்கத்தில் படம் வெளியான பிறகு நெட்ஃப்ளிக்ஸில் ஸ்ட்ரீமாகும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.