திடீரென வந்த வெடிகுண்டு சத்தம்.. ‘கேப்டன் மில்லர்’ படத்திற்கு எதிர்ப்பு.. மீண்டும் சிக்கலில் தனுஷ்!

 

மதுரை அருகே ‘கேப்டன் மில்லர்’ படப்பிடிப்பு குழுவினர் படத்தின் குண்டுவெடிப்பு காட்சிகள் அனுமதி பெறாமல் படமாக்கப்படுவதாக சர்ச்சை எழுந்துள்ளது. 

வாத்தி படத்தை தொடர்ந்து தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடித்து வரும் படம் ‘கேப்டன் மில்லர்’. இந்தப் படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் ஜான் கொக்கன், நிவேதிதா சதீஷ், குமரவேல், டேனியல் பாலாஜி, மூர், நாசர், விஜி சந்திரசேகர், சுவயம்சிதா தாஸ், பிந்து, அருணோதயன், ‘மேற்குத் தொடர்ச்சி மலை’ ஆண்டனி, பால சரவணன் மற்றும் சில முக்கிய நடிகர்கள் இணைந்து நடிக்கின்றனர்.

பிரபல தெலுங்கு நடிகர் சந்தீப் கிஷன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்யுப் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். படத்தினை சத்யஜோதி பிலிம்ஸ் T.G.தியாகராஜன் வழங்க செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் தயாரிக்கின்றனர். 

1930-40 காலகட்டத்தை பின்னணியாகக் கொண்ட வரலாற்று திரைப்படமாக உருவாகும் இப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியிடப்பட உள்ளது. படத்தின் பூஜை கடந்த ஆண்டு செப்டம்பர் 22-ம் தேதி தொடங்கியது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு காடு மற்றும் மலைப்பகுதிகளை ஒட்டி உள்ள இடங்களில் படமாக்கப்பட்டு வருகிறது.

முன்னதாக இந்தப் படத்தின் படப்பிடிப்புக்காக தென்காசி மாவட்டம் மத்தளம்பாறை அருகே உள்ள களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தின் (கேஎம்டிஆர்) பாதுகாப்பு மண்டலத்தில் சட்டவிரோதமாக செங்குளம் கால்வாயின் குறுக்கே மரப்பாலம் அமைத்து, அதன் கரைகளை சேதப்படுத்தி, வனவிலங்குகளுக்கு இடையூறு விளைவிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.

மேலும் அதிக ஒளியிலான பீம் லைட்கள் மற்றும் தீயை எரிப்பது மட்டுமல்லாமல், வெடிகுண்டு வெடிப்புகள் சம்பந்தப்பட்ட சண்டைக் காட்சிகளை படக்குழுவினர் வனத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதியில் படமாக்கி வருகின்றனர் என்றும் கூறப்பட்டது. இதனையடுத்து உரிய அனுமதி வாங்கவில்லை எனக்கூறி படப்பிடிப்பு நடத்த மாவட்ட ஆட்சியர் துரை ரவிச்சந்திரன் தடை விதித்தார். இதுபெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பின்னர் முறையான அனுமதி பெற்று கேப்டன் மில்லர் படப்பிடிப்பு துவங்கியது.

இந்த நிலையில் பல்லுயிர் சூழல் மண்டலமாக அறிவிக்கப்பட்ட மதுரை மாவட்டம் அரிட்டாப்பட்டியில் கேப்டன் மில்லர் படப்பிடிப்பு நடைபெற்றுவரும் நிலையில் உரிய அனுமதி பெறாமல் குண்டு வெடிப்பு காட்சிகள் படமாக்கப்படுவதாக அரிட்டாபட்டி பாதுகாப்புச் சங்கம் புகார் தெரிவித்துள்ளது. இதனால் மீண்டும் படப்பிடிப்பு தடைபடும் சூழல் ஏற்பட்டுள்ளது.