திடீர் உடல்நலக்குறைவு.. பிரபல பின்னணி பாடகி பி.சுசீலா மருத்துவமனையில் அனுமதி!

 

பிரபல பின்னணி பாடகி பி.சுசீலா உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முன்னணி பாடகிகளில் ஒருவராக திகழ்பவர் பி.சுசீலா. இவர், தமிழ் மட்டுமில்லாமல், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் பல ஹிட் பாடல்களை பாடியுள்ளார். இவர் மொத்தம் 25 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களை பாடியுள்ளார். பல்வேறு மொழிகளில் பாடல்கள் பாடியதால் பி.சுசீலாவுக்கு இந்தியா முழுவதும் ரசிகர்கள் உள்ளனர்.

தென்னிந்தியாவின் ‛இசைக்குறியல்’, மெல்லிசை அரசி என பி.சுசீலா அழைக்கப்பட்டு வருகிறார். இவர் பல சாதனைகளை படைத்துள்ளார். இந்தியாவிலேயே அதிக பாடல்களை பாடியவர் என்ற பெருமைக்காக உலக சாதனைக்கான கின்னஸ் புத்தகம் மற்றும் ஆசிய புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் உள்ளிட்டவற்றில் பி சுசீலாவின் பெயர் இடம் பெற்றுள்ளது.

மேலும் ஐந்து முறை மிகச்சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருதை பி.சுசீலா பெற்றுள்ளார். மேலும் சினிமா எனும் கலைத்துறைக்கு தொண்டாற்றியதாக பி.சுசீலாவுக்கு ஒன்றிய அரசு பத்ம பூஷன் விருது வழங்கி உள்ளது. தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருதும் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது. தற்போது பி சுசீலாவுக்கு 88 வயது ஆகிறது. அவர் சென்னையில் வசித்து வருகிறார்.

சென்னை ஆழ்வார்பேட்டை ஆனந்தா சாலையில் உள்ள இல்லத்தில் பி.சுசீலா தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் தான் இன்று திடீரென்று அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரை குடும்பத்தினர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியாருக்கு சொந்தமான காவேரி மருத்துவமனையில் பி.சுசீலா அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முதற்கட்டமாக பி.சுசீலாவுக்கு வயிற்று வலி ஏற்பட்டதாகவும் அதனை தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால் தற்போது இன்னொரு தகவல் வெளியாகி உள்ளது. பாடகி பி.சுசீலாவுக்கு வயது முதிர்வு மற்றும் சிறுநீரகக் கோளாறு ஏற்பட்டதாவும், அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது அவர் டாக்டர்கள் கண்காணிப்பில் நலமாக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.