மாணவி நந்தினிக்கு வைர நெக்லஸ் பரிசு.. கழுத்தில் மாட்டி அழகு பார்த்த விஜய்!!

 

ப்ளஸ்-2 பொதுத் தேர்வில் 600க்கு 600 மதிப்பெண்கள் பெற்ற திண்டுக்கல் நந்தினிக்கு நடிகர் விஜய் வைர நெக்லஸை பரிசாக வழங்கி இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

நடிகர் விஜய் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களை சந்திக்க இருப்பதாக கடந்த வாரம் அறிவித்தார். அகில இந்திய தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக சென்னை, நீலாங்கரையில் உள்ள ஆர்.கே.கன்வென்ஷன் சென்டரில் 2023ம் ஆண்டு நடந்து முடிந்த 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ்நாடு முழுவதும் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ‘தளபதி விஜய்’ மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் முன்னிலையில் சான்றிதழ்கள் மற்றும் ஊக்கத்தொகை வழங்கி கௌரவப்படுத்த உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், இன்று 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வில் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு நடிகர் விஜய் கல்வி உதவித்தொகை மற்றும் சான்றிதழ் வழங்கினார். அதன்படி முதல் இடம் பிடித்தவர்களுக்கு 25 ஆயிரம் ரூபாயும், இரண்டாம் இடம் பிடித்தவர்களுக்கு 15 ஆயிரம் ரூபாயும், 3ஆம் இடம் பிடித்தவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாயும் காசோலையாக வழங்கப்பட்டது. 

மாணவ, மாணவிகளுக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்தினார். மொத்தம் ரூ.2 கோடி செலவில் இந்த விருது விழா நடைபெறுவதாக விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் தெரிவித்தனர். தமிழ்நாட்டில் ப்ளஸ்-2 தேர்வில் 600க்கு 600 மதிப்பெண்கள் பெற்ற திண்டுக்கல் மாணவி நந்தினிக்கு வைர நெக்லஸ் பரிசளித்தார் நடிகர் விஜய். இரண்டு கைகளையும் இழந்த மாணவர் கீர்த்தி வாசனுக்கு பொன்னாடை அணிவித்து மேடையில் பரிசளித்தார்.