பாடகி பாம்பே ஜெயஸ்ரீ உடல்நிலை சீராக உள்ளது... குடும்பத்தினர் வெளியிட்ட அறிக்கை!!

 

பிரபல பின்னணி பாடகி பாம்பே ஜெயஸ்ரீ கீழே விழுந்து தலையில் பலத்த அடிபட்ட நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவை சேர்ந்தவர் பாம்பே ஜெயஸ்ரீ. தமிழ் குடும்பத்தை சேர்ந்த இவர் தனது பெற்றோரிடமிருந்தே வாய்ப்பாட்டு பாடி கற்று வந்தார். இதையடுத்து லால்குடி ஜெயராமன், டி.ஆர் பாலமணி ஆகியோரிடம் வாய்ப்பாட்டு கற்றுக் கொண்டார். பிறகு தண்டபாணி ஐயரிடம் வீணையையும் கற்று தேர்ந்தார். 

தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் பாடல்களை பாடியுள்ளார். இவர் மின்னலே திரைப்படத்தில் இடம் பெற்ற வசீகரா என்ற பாடலை பாடியுள்ளார். இதன் மூலம் பட்டித்தொட்டி எங்கும் பிரபலமானார். அதை தொடர்ந்து ஏராளமான ஹிட்பாடல்களை அவர் பாடியுள்ளார்.

இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், ஹாரிஷ் ஜெயராஜ் உள்ளிட்டவர்களின் இசையில் பாம்பே ஜெயஸ்ரீ பாடல்களை பாடியுள்ளார். குறிப்பாக ஹாரிஷ் ஜெயராஜ் இசையில் தொடர்ந்து பாடி வந்தார். அதேபோல் வெளிநாடுகளில் நடைபெறும் இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்றம் பாடல்களைப் பாடி வருகிறார்.

இந்த நிலையில், லண்டனில் நடக்கும் ஒரு இசை நிகழ்ச்சிக்காக அங்கு சென்றிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக கீழே தவறி விழுந்துள்ளார். அதில் அவரின் தலை பகுதியில் பலத்த அடிப்பட்டுள்ளது. இதையடுத்து சுயநினைவை இழந்துள்ளார் என்று கூறப்படுகிறது. அதையடுத்து லண்டனில் உள்ள ஒரு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதுகுறித்து ஜெயஸ்ரீ குடும்பத்தினர் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, “லண்டன் இசை நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற பாம்பே ஜெயஸ்ரீக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதயத்திலிருந்து மற்ற உறுப்புகளுக்கு ரத்தத்தை எடுத்து செல்லும் ரத்த நாளங்களில் ஏற்பட்ட பாதிப்புக்காக அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது. அவருக்கு ஓரிரு நாட்கள் ஓய்வு தேவைப்படுகிறது. இந்த சோதனையான காலகட்டத்தில் ரசிகர்கள் அமைதி காத்து ஆதரவு அளிக்க வேண்டுகிறோம். சமூக வலைதளங்களில் பரவும் தவறான தகவல்களை நம்ப வேண்டாம்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.