சிம்பு பட நாயகி மாரடைப்பால் மரணமா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை திவ்யா ஸ்பந்தனா!

 

நடிகை ரம்யா இறந்துவிட்டதாக வதந்தி பரவிவரும் நிலையில் தனது நண்பருக்கு எக்ஸ் பக்கத்தில் பதிலளித்து வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

2003-ம் ஆண்டு புனித் ராஜ்குமார் நடிப்பில் வெளியான ‘அபி’ படத்தின் மூலம் சாண்டல்வுட் சினிமாவில் அறிமுகமானவர் ரம்யா என்கிற திவ்யா ஸ்பந்தனா. 2003-ல் சிம்பு நடிப்பில் வெளியான ‘குத்து’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து கிரி, பொல்லாதவன், தூண்டில், வாரணம் ஆயிரம், சிங்கம் புலி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

தென்னிந்தியாவின் சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் உள்ளிட்ட பல விருதுகள் பெற்ற நடிகை திவ்யா ஸ்பந்தனா, பின்னர் அரசியலில் குதித்தார். 2012-ல் காங்கிரஸ் கட்சியில் இணைந்த நடிகை திவ்யா, 2013-ல் கர்நாடகாவின் மாண்டியா தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு லோக்சபா எம்.பி.யானார். ஆனால் 2014-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார்.

2019-ம் ஆண்டு காங்கிரஸில் பொறுப்புகளில் இருந்து நடிகை திவ்யா விலகினார். ஆனால் அண்மையில் நடைபெற்ற கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் காங்கிரசின் நட்சத்திர பேச்சாளராக பிரசாரம் செய்தார். தமக்கு மிகவும் நெருக்கடியான தருணங்களில் மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எப்படி எல்லாம் உதவியாக இருந்தார் என்பதை நடிகை திவ்யா உருக்கமாக தெரிவித்திருந்தது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது.

இந்த நிலையில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக இன்று காலை  வதந்திகள் பரவின. சினிமா செய்தி தொடர்பாளர்கள் சிலரே அந்த வதந்தியை உண்மையென நம்பி சோஷியல் மீடியாவில் ஷேர் செய்தால், அந்த செய்தி வேகமாக பரவியது.