7 ஃபிலிம் ஃபேர் விருதுகளை அள்ளி கெத்து காட்டிய சித்தா… உற்சாகத்தில் படக்குழு!

 

69வது ஃபிலிம் ஃபேரில் சித்தார்த் முன்னணி கேரக்டரில் நடித்த சித்தா திரைப்படத்திற்கு 7 விருதுகள் கிடைத்துள்ளது.

69வது ஃபிலிம் ஃபேர் விருது 2024 இல் மொத்தம் தமிழ் திரையுலகிற்கு மட்டும் 15 கேட்டகிரியின் கீழ் 16 விருதுகள் வழங்கப்பட்டது. குறிப்பாக விமர்சகர்களால் பெரிதும் பாராட்டைப் பெற்ற நடிகர் சித்தார்த் நடிப்பில் இயக்குநர் சு.அருண்குமார் இயக்கத்தில் வெளியான சித்தா படம் சிறந்த படம் மற்றும் சிறந்த இயக்குநர் விருதுகளை வென்றது. அதேபோல் இந்த படத்தில் நடித்ததற்காக விமர்சகர்களால் வழங்கப்படும் சிறந்த நடிகருக்கான விருதும் சித்தார்த்துக்கு வழங்கப்பட்டது. 

மேலும் இந்த படத்தில் இடம் பெற்ற கண்கள் ஏதோ பாடலைப் பாடியதற்காக கார்த்திகா வைத்தியநாதனுக்கு சிறந்த பின்னணி பாடகி விருது வழங்கப்பட்டுள்ளது. மேலும் சிறந்த இசை ஆல்பம், சிறந்த துணை நடிகை என சித்தா படம் விருதுகளை அள்ளிக் குவித்தது.

நடிகர் சித்தார்த் தனது இடாகி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரித்து நடித்த படம் ‘சித்தா’. இதை ‘பண்ணையாரும் பத்மினியும்’, ‘சேதுபதி’ ஆகிய படங்களை இயக்கிய அருண்குமார் இயக்கியிருந்தார். இந்தப் படம், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் குறித்த அழுத்தமான கதைகளத்தை கொண்டிருந்த இப்படம் விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்றது.

வசூல் ரீதியாக ரூ.5 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் உருவாகி ரூ.25 கோடியை வசூலித்ததாக தகவல் வெளியானது. சித்தா படத்தில் இடம்பெற்ற பாடல்களுக்கு திபு நினன் தாமஸ் மற்றும் சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தனர். விஷால் சந்திரசேகர் பின்னணி இசை அமைத்திருந்தார்.

சித்தா படத்தினைப் போலவே பொன்னியின் செல்வன் படமும் விருதுகளை அள்ளிக்குவித்தது. அதன் விபரத்தைக் காணலாம்.

சிறந்த படம் - சித்தா 
சிறந்த இயக்குநர் - சு அருண் குமார் (சித்தா) 
சிறந்த திரைப்படம் (விமர்சகர்கள்) - விடுதலை: பகுதி 1 (வெற்றி மாறன்) 
முன்னணி பாத்திரத்தில் சிறந்த நடிகர் (ஆண்) - விக்ரம் (பொன்னியின் செல்வன்- பாகம் 2) 
சிறந்த நடிகர் (விமர்சகர்கள்) - சித்தார்த் (சித்தா) 
முன்னணி பாத்திரத்தில் சிறந்த நடிகர் (பெண்) - நிமிஷா சஜயன் (சித்தா) 
சிறந்த நடிகை (விமர்சகர்கள்) - ஐஸ்வர்யா ராஜேஷ் (ஃபர்ஹானா), அபர்ணா தாஸ் (தாதா) 
துணை வேடத்தில் சிறந்த நடிகர் (ஆண்) - ஃபஹத் பாசில் (மாமன்னன்) 
துணை வேடத்தில் சிறந்த நடிகர் (பெண்) - அஞ்சலி நாயர் (சித்தா) 
சிறந்த இசை ஆல்பம் - திபு நினன் தாமஸ் மற்றும் சந்தோஷ் நாராயணன் (சித்தா)
சிறந்த பாடல் வரிகள் - இளங்கோ கிருஷ்ணன் (அக நக- பொன்னியின் செல்வன் பாகம் 2) 
சிறந்த பின்னணிப் பாடகர் (ஆண்) - ஹரிச்சரண் (சின்னஞ்சிறு நிலவே- பொன்னியின் செல்வன் பாகம் 2) 
சிறந்த பின்னணிப் பாடகர் (பெண்) - கார்த்திகா வைத்தியநாதன் (கண்கள் ஏதோ- சித்தா) 
சிறந்த ஒளிப்பதிவு ரவி வர்மன் - (பொன்னியின் செல்வன் பாகம் 2) 
சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு - தோட்ட தாரணி (பொன்னியின் செல்வன் பாகம் 2) 

இதேபோல் மலையாளம், தெலுங்கு திரையுலத்தினருக்கும் விருதுகள் வழங்கப்பட்டது.