அதிர்ச்சி.. மீண்டும் விஜயகாந்துக்கு ஆக்சிஜன் உதவியுடன் தீவிர சிகிச்சை!

 

மியாட் மருத்துவமனையில் விஜயகாந்துக்கு ஆக்சிஜன் உதவியுடன் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் உடல்நலக் குறைவால் சில ஆண்டுகளாக வீட்டிலேயே ஓய்வில் இருந்து வருகிறார். சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதால், அவ்வப்போது மருத்துவமனைக்கு சென்று பரிசோதனைகளை மேற்கொண்டு வருகிறார். வீட்டில் ஓய்வில் இருந்த விஜயகாந்த், சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் கடந்த 18-ம் தேதி அனுமதிக்கப்பட்டார்.

மார்புச் சளி, இடைவிடாத இருமல் காரணமாக விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விஜயகாந்திற்கு ஏற்கனவே பல்வேறு உடல் உபாதைகள் இருப்பதன் காரணமாக உடல்நிலை மற்றும் உறுப்புகளின் செயல்பாட்டை துல்லியமாக கண்காணிப்பதற்காக ஐசியூவில் வைத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அவருக்கு சில நேரங்களில் சுயமாக சுவாசிப்பதில் சிரமம் இருந்ததால் அந்த நேரங்களில் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது.

இதற்கிடையே, விஜயகாந்த் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டது. அவரை நுரையீரல் நிபுணர்கள் கண்காணித்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்நிலையில், அவருக்கு முழுவதுமாக ஆக்சிஜன் உதவியுடன் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.