அதிர்ச்சி!பிரபல பழம்பெரும் நடிகை காலமானார்.. பிரதமர் மோடி இரங்கல்
Updated: Jun 5, 2023, 06:55 IST
பத்மஸ்ரீ விருது பெற்ற பழம்பெரும் இந்தி நடிகை சுலோச்சனா லட்கர் காலமானார். அவருக்கு வயது 94.
1940-களில் மராத்தி படங்களின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை சுலோச்சனா லட்கர். இவர், சசுர்வாஸ் (1946), வஹினிச்யா பங்த்யா (1953), மீத் பாகர் , சாங்த்யே அய்கா (1959), லக்ஷ்மி அலி கரா , மோதி மன்சேரா போன்ற படங்களில் முன்னணி நடிகையாக இருந்தார்.
பின்னர் அங்கு இருந்து இந்தி திரையுலகத்துக்கு வந்தார். 1957-ல் வெளியான அப் டில்லி துர் நஹின் படத்தின் மூலம் இந்தி திரையுலகில் அறிமுகமானார். இவர் இந்தியில் சுமார் 250 படங்களிலும், மராத்தியில் 50 படங்களிலும் நடித்து உள்ளார்.
குறிப்பாக நடிகர் சம்மி கபூர், திலீப் குமார், தேவ் ஆனந்த், வினோத் கண்ணா, ஜாக்கி ஷெராப் போன்ற முன்னணி நடிகர்களுக்கு தாயாக நடித்து உள்ளார். 1999-ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது பெற்று உள்ளார்.
மும்பையில் வசித்து வந்த இவர் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று மாலை 6 மணியளவில் உயிரிழந்தார். நடிகையின் உடல் இறுதி மரியாதைக்காக பிரபாதேவியில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்படுகிறது. இறுதி சடங்கு இன்று மாலை 5.30 மணியளவில் தாதர் சிவாஜி பார்க் மைதானத்தில் நடைபெற உள்ளது.
பிரதமர் மோடி சுலோச்சனா லட்கர் மறைவுக்கு ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், சுலோச்சனா ஜியின் மறைவு இந்திய சினிமா உலகில் ஒரு பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்துகிறது. அவரது மறக்க முடியாத நிகழ்ச்சிகள் நமது கலாச்சாரத்தை வளப்படுத்தியது மற்றும் தலைமுறைகள் கடந்தும் மக்களிடம் அன்பாக இருந்தது. அவரது சினிமா மரபு அவரது படைப்புகள் மூலம் வாழும். அவரது குடும்பத்தினருக்கு அனுதாபங்கள். ஓம் சாந்தி. என தெரிவித்துள்ளார். இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.