இரட்டை குழந்தைக்கு தாயான சீரியல் நடிகை.. குவியும் வாழ்த்து!

 

பிரபல சீரியல் நடிகை ஸ்வேதா பண்டேகருக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளதாக இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

2007-ல் அஜித் நடிப்பில் வெளியான ‘ஆழ்வார்’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ஸ்வேதா பண்டேகர். இந்தப் படத்தில் அஜித்தின் தங்கையாக நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து வள்ளுவன் வாசுகி, பூவா தலையா, நான் தான் பாலா உள்ளிட்ட சில படங்களில் நடித்த ஸ்வேதா பண்டேகர் கடைசியாக ஜெயம் ரவி நடிப்பில் வெளியான பூலோகம் படத்தில் நடித்திருந்தார்.

மேலும் 2009-ம் ஆண்டு முதல் சின்னத்திரையில் நடித்து வரும் ஸ்வேதா பண்டேகர் சன்டிவியின் மகள் சீரியல் மூலம் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து சந்திரலேகா தொடரில் நடித்தார். இந்த சீரியலில் 2 வேடங்களில் நடித்த ஸ்வேதா பண்டேகர் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பாராட்டுக்களை பெற்றிருந்தார். மேலும் ஜீ தமிழின் லட்சுமி வந்தாச்சு என்ற தொடரிலும் நடித்துள்ளார்.

பல ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்றுள்ள ஸ்வேதா பண்டேகர் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். பல விளம்பர படங்களில் நடித்துள்ள ஸ்வேதா பண்டேகர், சன் மியூசிக் சேனலில் தொகுப்பாளராக இருந்த மால் மருகா என்பரை 10 ஆண்டுகள் காதலித்து கடந்த ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களின் திருமணம் தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவிய நிலையில் பலரும் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர்.

இதனிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் கர்ப்பமாக இருப்பதாக கூறிய ஸ்வேதா பண்டேகர், தனது கணவருடன் இணைந்து போட்டோஷூட் நடத்தியுள்ள புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிய நிலையில், நெட்டிசன்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், கர்ப்பமாக இருந்த ஸ்வேதா பண்டேகருக்கு, தற்போது இரட்டை குழந்தை பிறந்துள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் தெரிவித்துள்ளார். அதில், “ஆக.30 அன்று மால், ஸ்வெப்னா என்ற இரண்டு முழு நிலவை கண்டோம். இரண்டும் வெவ்வேறானவை. இரண்டும் நன்றாக பிரகாசிக்கின்றன. எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி” எனத் தெரிவித்துள்ளார். நடிகை ஸ்வேதா பண்டேகர் தனக்கு இரட்டை குழந்தை பிறந்ததை அறிவித்ததையடுத்து, ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.