ரூ. 7.7 கோடி ஏமாற்றிய தொழிலதிபர்.. நடிகை கௌதமி பரபரப்பு புகார்!

 

நிலம் விற்பனை செய்ததில் தொழிலதிபர் ரூ.7.7 கோடி ஏமாற்றியதாக நடிகை கௌதமி பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் 80 மற்றும் 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்து இளசுகளின் மனதை கவர்ந்தவர் நடிகை கௌதமி. ரஜினி, கமல் போன்ற முன்னனி நடிகர்களுடன் நடித்து தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டிருந்தவர். இவர் நடித்த படங்கள் அனைத்தும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தது. தற்போது பாஜகவில் இணைந்துள்ளார்.

இந்த நிலையில், சென்னை அருகே உள்ள கோட்டையூரில் 8.61 ஏக்கர் நிலம் விற்பனை செய்ததில் 7.7 கோடி ரூபாய் தன்னை ஏமாற்றிய தொழிலதிபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் நடிகை கெளதமி புகார் அளித்துள்ளார்.

சென்னை அக்கரை பகுதியில் வசித்து வரும் நடிகை கௌதமி பல்வேறு மொழிகளில் 125க்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகியாக நடித்து உள்ளார். இதில் கிடைத்த வருமானத்தை கொண்டு திருவள்ளூர் மாவட்டம் கோட்டையூர் கிராமத்தில் 10 ஏக்கர் நிலத்தை கடந்த 1990-ம் ஆண்டு வாங்கியுள்ளார். இதில் 8.61 ஏக்கர் நிலம் கௌதமி பேரிலும் மீதமுள்ள இடத்தை தாய் பெயரில் பதிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில் 2004-ம் ஆண்டு தனக்கு புற்றுநோய் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தேன். மேலும் எனது குழந்தைக்கு நான்கு வயது இருக்கும் நிலையில் இடத்தை நிர்வாகிக்க முடியவில்லை. இந்த நிலையில் அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் பலராமன் மற்றும் செங்கல்பட்டு ரகுநாதன் ஆகியோர் என்னிடம் அறிமுகமாகி நல்ல நம்பிக்கை பெற்றனர்.

இந்த நிலையில் 2015-ம் ஆண்டு இடத்தை விற்பனை செய்வதற்காக பலராமன் மற்றும் ரகுநாதனுக்கு அதிகாரம் (பவர்) கொடுத்தேன். அதன் பிறகு இருவரும் சேர்ந்து 4.10 கோடிக்கு தனியார் நிறுவனத்திற்கு விற்பனை செய்து இந்த பணத்தை இரண்டு தவணையாக கொடுத்து விடுவதாகும் நம்பிக்கை கொடுத்து கையெழுத்து பெற்றனர். 

பிறகு வருமான வரித்துறை அலுவலகத்தில் இருந்து 2021 செப்டம்பர் 4-ம் தேதி கடிதம் ஒன்று வந்தது. அதில் கோட்டையூரில் உள்ள சொத்துக்கள் 11.17 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்தது தொடர்பாக வருமான வரி துறைக்கு இரண்டு கோடியே 61 லட்சம் கட்டவில்லை என்று தெரிவித்தது. எனது வங்கி கணக்கு அனைத்தும் முடக்கம் செய்யப்பட்டது. இதனால்  மன உளைச்சலுக்கு ஆளானதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு வழக்கு நடைபெற்று வருவதாகவும் புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார். மேலும் எனது சொத்து விற்பனை செய்தது தொடர்பாக ஆவணங்களை சுங்குவார்சத்திரம் சார் பதிவாளர் அலுவலகத்தில் நகலெடுத்து பார்த்தபோது எனது நிலத்தை விற்பனை செய்த பவர் ஏஜெண்டாக இருந்த பலராமன், ரகுநாதன் ஆகியோர் 6-1-2016 அன்று 8.16 ஏக்கர் நிலத்தை 11.17 கோடி ரூபாய்க்கு விற்பனையானது தெரியவந்தது.

மேலும் முதல்கட்டமாக ரூ.4.10 கோடி மட்டும் தன்னிடம் கொடுத்துவிட்டு மீத உள்ள பணத்தை என்னிடம் தராமல் தன்னை ஏமாற்றி உள்ளதாகவும் எனவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை காவல்துறை ஆணையர் ராய் ரத்தோர் அவர்களை சந்தித்து புகார் ஒன்றை கொடுத்ததாகவும் கௌதமி தெரிவித்தார்.