பிச்சைக்காரன் 2 படத்தை வெளியிட அனுமதி.. சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!!

 

விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள பிச்சைக்காரன் 2 படத்தை வெளியிட அனுமதி அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2016-ல் சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான படம் ‘பிச்சைக்காரன்’. இந்தப் படம் விஜய் ஆண்டனி திரைப்பயணத்தில் முக்கிய மைல்கல்லாக அமைந்தது. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது பிச்சைக்காரன் படத்தின் 2-ம் பாகத்தை விஜய் ஆன்டனியே நடித்து இயக்கி வருகிறார். இசையமைப்பாளர் நடிகர் என இருந்த விஜய் ஆன்டனி இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். 

விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் சார்பில் பாத்திமா விஜய் ஆண்டனி தயாரிப்பில் உருவாகும் பிச்சைக்காரன் 2 திரைப்படத்தில் விஜய் ஆண்டனி உடன் இணைந்து காவியா தப்பர் கதாநாயகியாக நடிக்க, ராதா ரவி, மன்சூர் அலிகான், ஹரிஷ் பெரடி, ஜான் விஜய், தேவ் கில், யோகி பாபு, ஒய்ஜி மகேந்திரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ஓம் நாராயணன் ஒளிப்பதிவில் உருவாகும் பிச்சைக்காரன் 2 திரைப்படத்திற்கு விஜய் ஆண்டனியே படத்தொகுப்பும் செய்து இசையமைக்கிறார். 

இந்த நிலையில், பிச்சைக்காரன் 2 படத்திற்கு தடை விதிக்கக் கோரி சென்னையை சேர்ந்த ராஜகணபதி என்பவர் தாக்கல் செய்திருந்த மனுவில், தங்களது தயாரிப்பு நிறுவனம் நடிகர் ஆர்.பாண்டியராஜன் நடிப்பில் ஏற்கெனவே ஆய்வுக்கூடம் என்ற படத்தை தயாரித்து கடந்த 2016-ம் ஆண்டு வெளியான படத்தின் கதையை தங்களின் அனுமதியின்றி அப்படியே காப்பியடித்து விஜய் ஆண்டனி நடிப்பில் படத்தை எடுத்துள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. நஷ்ட ஈடாக பத்து லட்ச ரூபாய் வழங்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்திருந்தார்.

இதற்கு பதில் மனுத்தாக்கல் செய்த தயாரிப்பாளர் விஜய் ஆண்டனி, ஆய்வுக்கூடம் படம் குறித்த எந்த தகவலும் தமக்கு எதுவும் தெரியாது எனவும், அந்த படத்தை தாம் பார்த்தது கூட இல்லை எனவும் கூறியுள்ளார். வழக்கு தொடரப்பட்ட பின்னரே அந்த படத்தை பார்த்ததாகவும், பிச்சைக்காரன் 2 படத்திற்கும் ஆய்வுக்கூடம் படத்திற்கும் எந்த ஒற்றுமையும் இல்லை எனவும் விஜய் ஆண்டனி கூறியிருந்தார்.

இந்நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.சவுந்தர் பிறப்பித்துள்ள உத்தரவில், பிச்சைக்காரன் 2 படத்தை வெளியிட அனுமதி அளித்தார். அதே வேளையில் படத்தை வெளியிடுவதன் மூலம் கிடைக்கும் வருவாய் விவரங்களை ஆடிட்டர் சான்றிதழுடன் 60 நாட்களில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டுமெனவும் தயாரிப்பாளர் விஜய் ஆண்டனிக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.