அரசியலில் நுழைந்து புதுமையை காட்ட தயார்... காமெடி நடிகர் தாடி பாலாஜி அதிரடி அறிவிப்பு!!

 

தனக்கு அங்கீகாரம் கொடுக்கும் கட்சிகளோடு இணைந்து பணியாற்ற இருப்பதாக காமெடி நடிகர் தாடி பாலாஜி தெரிவித்துள்ளார்.

சென்னை அயனாவரம் சயானி பேருந்து நிறுத்தம் அருகே பரோ உபகார அறக்கட்டளையின் சார்பாக தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. அறக்கட்டளையின் நிறுவனர் வசந்த்குமார் செயலாளர் கார்த்திக் மற்றும் வி4 ஈவன்ட்ஸ் நிறுவனர் வந்தித் ஆகியோர் முன்னிலையில் சினிமா நடிகர் மற்றும் சின்னத்திரை புகழ் தாடி பாலாஜி கலந்துகொண்டு தண்ணீர் பந்தலை திறந்து வைத்து மோர் மற்றும் தர்பூசணி வெள்ளரிக்காய் ஆகியவற்றை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தாடி பாலாஜி கூறுகையில், தான் கட்டாயம் அரசியலுக்கு வரவுள்ளதாகவும் தனக்கு அங்கீகாரம் கொடுக்கும் கட்சிகளோடு இணைந்து பணியாற்ற இருப்பதாகவும் அதே கட்சியில் புதுமையான முறையில் தனித்துவமாக செயல்படுவதாகவும் தெரிவித்தார்.

போதைப் பொருட்களை பொருத்தவரையில் அதனை உபயோகிப்பவர்கள் நினைத்தால் மட்டுமே முற்றிலும் தடுக்க முடியும் என்றும் கூறினார். தற்போது பன்னிரெண்டாவது முடித்த மாணவ, மாணவியரை அடுத்த கட்டமாக கல்லூரிக்கு அனுப்புவதற்காக பெற்றோர்கள் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஒவ்வொரு கல்லூரிகளாக அலைந்து வருகின்றனர்.  மாணவர்கள்  இதனை கருத்தில் கொண்டு நன்கு படித்து வெற்றி பெற வேண்டும் என்றார்.

சமீபத்தில் பிளஸ்-2 தேர்வில் திண்டுக்கல் மாணவி நந்தினி 600-க்கு 600 மதிப்பெண் எடுத்து வரலாற்று சாதனை படைத்தார். இவருக்கு பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர். இதையடுத்து தமிழ் பாடத்தில் முதலிடம் பிடித்த மாணவி லக்ஷயா ஸ்ரீயை நடிகர் தாடி பாலாஜி அரக்கோணத்தில் உள்ள அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து பாராட்டியுள்ளார்.