தனுஷின் 50-வது படம் ‘ராயன்’.. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!
நடிகர் தனுஷின் 50-வது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்த கேப்டன் மில்லர் படம் கடந்த மாதம் வெளியானது. திரையரங்குகளில் ரிலீசான இந்தப் படத்தில் அவருடன் இணைந்து பிரியங்கா மோகன் உள்ளிட்டவர்கள் நடித்திருந்தனர். கன்னட நடிகர் சிவராஜ்குமாரும் இந்த படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்திருந்தார். இந்தப்படம் வெளியாகி கலமையான விமர்சனங்களை பெற்ற போதிலும் வசூலில் சிறப்பாக அமைந்தது.
இந்நிலையில் தன்னுடைய இயக்கத்தில் அடுத்தடுத்து இரண்டு படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் தனுஷ். அவரது டி50 படத்தின் சூட்டிங் நிறைவடைந்துள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் அவருடன் சந்தீப் கிஷன், காளிதாஸ், அபர்ணா முரளி உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். டைட்டில் அறிவிக்கப்படாத இந்த படத்தின் தலைப்பு இன்றைய தினம் வெளியாகும் என்று முன்னதாக படக்குழு சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று மாலை 6 மணியளவில் படத்தின் டைட்டில் வெளியாகியுள்ளது. படத்திற்கு ராயன் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. சன் பிக்சர்ஸ், தனுஷ் உள்ளிட்ட படக்குழுவினர் இந்த டைட்டிலை தங்களது எக்ஸ் பக்கத்தில் அறிவித்துள்ளனர். இந்த படத்தை எழுதி இயக்கியுள்ளார் தனுஷ். அந்த வகையில் முன்னதாக அவரது இயக்கத்தில் வெளியான ப பாண்டி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இந்த படமும் சிறப்பாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது டைட்டிலுடன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் படக்குழு சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. படம் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி என மூன்று மொழிகளில் ரிலீசாக உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள நிலையில் படத்தின் பாடல்கள் சிறப்பாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.