ரஜினியின் 50 வது ஆண்டு... பிரதமர் மோடிக்கு தெரியாமல் போச்சே!!

 

அபூர்வ ராகங்கள் திரைப்படத்தில் இரும்புக் கதவுகளைத் திறந்தபடி தமிழ் சினிமாவில் அறிமுகமான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்,  கூலி திரைப்படம் மூலம் 50 வது ஆண்டை திரைப்பயணத்தில் எட்டியுள்ளார். ஆரம்பகாலத்தில் சிறு வேடத்தில் அறிமுகமாகி, வில்லனாக தொடர்ந்து, இரண்டாம் நாயகனாக கமலுடன் கூட்டணி போட்டு பின்னர் தனி நாயகனாக இன்று வரையிலும் தமிழ்த் திரையுலகின் முடிசூடா மன்னனாக திகழ்ந்து வருகிறார்.

அரசியலில் சறுக்கலை சந்தித்த ரஜினிகாந்த், அனைத்து அரசியல்வாதிகளுடனும் நல்ல நட்பைப் பேணி வருகிறார். இன்று ரஜினியின் 50 வது ஆண்டு திரைப்பயணத்தையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அனைத்து தமிழ்நாடு அரசியல் கட்சித் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார் ரஜினிகாந்த். ஆனால் பிரதமர் மோடி, மற்றும் பிற மாநில அரசியல் தலைவர்கள் யாருக்கும் ரஜினியின் 50வது ஆண்டு திரைப்பயணம் குறித்து தெரிந்திருக்கவில்லை போலும்.. ரஜினி போன் செய்தால் உடனடியாக பிரதமரே எடுத்துப் பேசுவார் என்று கலாநிதி மாறன் கூலிப் பட விழாவில் கூறியிருந்தார்.

ஆனால் பிரதமர் மோடியிடமிருந்து, 50 ஆண்டுகளாக திரைத்துறையைக் கட்டிபோட்டு இந்தியாவின் முகமாக அறியப்படும் ரஜினிகாந்துக்கு வாழ்த்து வரவில்லை என்பது வருத்தத்திற்குரிய ஒன்றே ஆகும். கலைஞரோ, ஜெயலலிதாவோ முதலமைச்சராக இருந்திருந்தால் ரஜினியின் 50 ஆவது ஆண்டு திரைப்பயணத்திற்காக ஒரு பெரிய விழாவே எடுத்து இருப்பார்கள். முதலமைச்சர் மு,க.ஸ்டாலின் என்ன செய்யப் போகிறார் என்று பார்க்கலாம்!