ரஜினிகாந்த் நடிக்கும் ‘தலைவர் 171’ படம்.. சூப்பர் அப்டேட் கொடுத்த லோகேஷ்.. உற்சாகத்தில் ரசிகர்கள்!!
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ள படத்தின் அப்டேட் வெளியாகி ரஜினி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
பாவக் கதைகள் இணையத் தொடரில் தங்கம் என்ற கதையில் சதார் என்ற திருநங்கையாக நடித்து அசத்தினார் காளிதாஸ் ஜெயராம். அந்தத் தொடர் அவருக்கு நல்ல நடிகர் என்ற பெயரைப் பெற்றுத்தந்தது. மேலும், லோகேஷ் இயக்கத்தில் பெரும் வெற்றிபெற்ற விக்ரம் படத்தில் கமலின் மகனாக சிறிய வேடத்தில் நடித்திருந்தார்.
அதனை தொடர்ந்து, நவரசா ஃபிலிம்ஸ் தயாரிப்பில், காளிதாஸ் ஜெயராம் நடிப்பில் வெளியாக உள்ள படம் ‘அவள் பெயர் ரஜ்னி’. தமிழ் மற்றும் மலையாளம் மொழிகளில் உருவாகியுள்ள இப்படம், துப்பறியும் திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ளது. இயக்குநர் வினில் ஸ்கரியா வர்கீஸ் படத்தை இயக்கியுள்ளர்.
இந்த நிலையில் இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியீடு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபல இயக்குநர் லோகேஷ் கனகராஜ், அந்தப் படத்தின் டிரெய்லரை வெளியிட்டார். அதற்கு பிறகு பேசிய அவர் படக்குழுவினரையும் காளிதாஸ் ஜெயராமையும் பாராட்டினார்.
அப்போது பேசுகையில், தன்னுடைய இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் தலைவர் 171 படத்திற்கான கதையை அடுத்த வாரம் முதல் எழுதுவதாக கூறினார். லியோ படத்தின் வேலைகளில் இருந்ததால் கதைகள் எழுத முடியவில்லை. எனவே, அடுத்த வாரத்தில் இருந்து தொடங்குகிறேன் என தெரிவித்தார். அத்துடன் தலைவர் 121 படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் தொடங்கும் எனவும் கூறியுள்ளார்.
லோகேஷ் இயக்கத்தில் வெளிவந்த லியோ திரைப்படம் சுமார் ரூ. 600 கோடிக்கும் அதிகமாக வசூலித்திருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக அவர் இயக்கிய விக்ரம் திரைப்படம் வசூலில் ரூ. 400 கோடியை தாண்டியிருந்தது. இந்த தொடர் வெற்றிகளையடுத்து ரஜினிகாந்துடன் லோகேஷ் கனகராஜ் இணைந்துள்ளார்.
விஜய்யின் லியோ லோகேஷின் சினிமா யூனிவர்சுக்குள் வருமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் காணப்பட்ட நிலையில், அந்த படம் கைதி, விக்ரமை உள்ளடக்கிய எல்.சி.யூ.வுக்குள் இணைந்துள்ளது. இந்நிலையில் ரஜினிகாந்தை வைத்து இயக்கும் படம் ஸ்டாண்ட் அலான் எனப்படும் தனி கதையாக இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.