ரஜினிகாந்த் பயோபிக் திரைப்படமாக உருவாகிறது.. ரஜினியாக நடிக்க இருப்பது யார்?

 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பயோபிக் திரைப்படமாக உருவாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

1975-ல் கே.பாலசந்தர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான ‘அபூர்வ ராகங்கள்’ படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமான ரஜினிகாந்த், 48 ஆண்டுகளாக தமிழ் சினிமாவை ஆட்டிப்படைத்து வருகிறார். தனது ஸ்டைலாலும், தனித்துவமான நடிப்பாலும், இந்திய சினிமாவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார் ரஜினிகாந்த். இதுவரை 169 படங்கள் ஹீரோவாக நடித்திருக்கும் ரஜினி, தன்னுடைய படங்களின் வசூலை வைத்தே பல சாதனைகளை படைத்து இருக்கிறார்.

இவர் நடிப்பில் வெளியான 2.0 திரைப்படத்திற்கு, அதிகமாக வசூல் செய்த படம் என்ற பெருமையை பெற்றது. உலகம் முழுவதும் இப்படம் 800 கோடிகளுக்கு மேல் வசூலித்தது. அதுமட்டுமில்லாமல், ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளியான ஜெயிலர் படமும் உலகம் முழுவதும் 600 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து மிகப்பெரிய பிளாக் பஸ்டர் ஹிட்டானது. அதுவரை ரஜினியை சாதாரணமாக பார்த்த இன்றைய இளசுகளும் அவரை கொண்டாடத் தொடங்கினர்.

தற்போது ரஜினிகாந்த் வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படத்தைத் தொடர்ந்து லோகேஷ்கனகராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள தலைவர் 171 படத்தில் கமிட்டாகி உள்ளார். இந்த படத்தில் ரஜினிகாந்த் இரு கைகளிலும் கைகடிகாரத்தால் ஆன விலங்கை கட்டியிருப்பது போன்ற போஸ்டர் ஒன்று அண்மையில் வெளியானது. மேலும் படத்திற்கு கூலி என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி சமீபத்தில் அந்த படத்தின் அறிமுக வீடியோ ஒன்று வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்தின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாக உள்ளதாக சினிமா வட்டாரத்தில் தகவல் கசிந்துள்ளது. இந்த படத்தை பிரபல பாலிவுட் இயக்குனரும் தயாரிப்பாளருமான சஜித் நதியத்வாலா தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இவர் ஏற்கனவே 83, சூப்பர் 30, கிக் உள்ளிட்ட படங்களை தயாரித்தவர் ஆவார். இதற்கு ரஜினிகாந்த் ஒகே சொல்லிவிட்டதால், பயோபிக் படத்துக் கதை எழுதும் பணி தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. பேப்பர் வொர்க் முடிந்ததும், இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என நம்பப்படுகிறது.

ரஜினிகாந்தின் கதாப்பாத்திரத்தில் நடிக்க பல பெரிய நடிகர்களின் பெயர்களை ரசிகர்கள் பரிந்துரைத்தாலும், இன்னும் சிலர் தற்போது வளர்ந்து வரும் ஒரு நடிகரின் பெயரை கூறுகின்றனர். அவர்தான், மணிகண்டன். இவர், ஏற்கனவே காலா படத்தில் ரஜினிக்கு மகனாக நடித்திருக்கிறார். இவர் நடிப்பில் வெளியான குட் நைட், லவ்வர் உள்ளிட்ட படங்கள் சமீப காலங்களில் ஹிட் அடித்தன. இன்றைய இளைஞர்கள் மட்டுமன்றி, பெரியவர்களுக்கு கூட இவரை பிடித்திருக்கிறது. இதனால், இவர் ரஜினியாக நடித்தால் நன்றாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.