சினிமாவில் இருந்து விலகுகிறாரா? நடிகை டாப்ஸி பரபரப்பு பேட்டி

 

நடிப்பை விட சொந்த வாழ்க்கைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய நேரம் தற்போது வந்து விட்டது என நடிகை டாப்சி கூறியுள்ளார்.

2010-ம் ஆண்டு வெளியான ‘ஜும்மண்டி நாதம்’ படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமானவர் டாப்ஸி பண்ணு. அதனைத் தொடர்ந்து, 2011-ல் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான ‘ஆடுகளம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன்பின், வந்தான் வென்றான், காஞ்சனா 2, கேம் ஓவர், அனபெல் சேதுபதி படத்தில் நடித்திருந்தார். இதனிடையே கதை திரைக்கதை வசனம் இயக்கம், வை ராஜா வை உள்ளிட்ட படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார்.

மேலும் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் கவனம் செலுத்தி வருகிறார். தமிழில் ஜெயம் ரவியின் ‘ஜன கன மன’ படத்தில் நடித்துள்ளார். இப்படம் வெளியாவதில் தாமதமாகி வருகிறது. இவர், டென்மார்க்கை சேர்ந்த பாட்மிண்டன் பயிற்சியாளர் மத்யாஸ் போ என்பவரைக் கடந்த 10 வருடங்களாகக் காதலித்து வருகிறார்.

இவர்கள் திருமணம் மார்ச் இறுதியில் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் நடைபெற இருப்பதாகத் தகவல் வெளியாகி இருந்தது. இந்நிலையில் இவர்கள் திருமணம் கடந்த 23-ம் தேதி நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. சீக்கிய மற்றும் கிறிஸ்துவ முறைப்படி திருமணம் நடைபெற்றுள்ளது. இதில் நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள், சில திரைபிரபலங்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

இந்த நிலையில் டாப்ஸி அளித்துள்ள பேட்டியில், “எனது வாழ்க்கையில் அதிக நாட்களை சினிமாக்களுக்காக செலவழித்து விட்டேன். 24 மணி நேரத்தில் 12 மணி நேரம் உழைத்த நாட்களும் உண்டு. நடிப்பை விட சொந்த வாழ்க்கைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய நேரம் தற்போது வந்து விட்டது.

எனவே, இந்த கதையை விடவே கூடாது என்று நினைக்கும் அளவுக்கு நல்ல கதைகள் வந்தால் மட்டுமே இனி நடிக்க வேண்டும் என்று முடிவு செய்து இருக்கிறேன். சினிமா கெரியரை விட வாழ்க்கை என்பது மிகவும் முக்கியமானது. அந்த வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும் என்று முடிவு செய்து கொண்டேன். குடும்ப உறுப்பினர்கள், சினேகிதர்கள் உறவினர்கள் இடையே அதிக நேரத்தை செலவிட விரும்புகிறேன்” என்றார்.