இணையத்தைக் கலக்கும் புஷ்பா-2 டிரெய்லர்.. 12 கோடி பார்வைகளை கடந்து சாதனை!

 

அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாக உள்ள ‘புஷ்பா 2’ படத்தின் டிரெய்லர் வெளியான 24 மணிநேரத்தில் 10.2 கோடி பார்வைகளை பெற்று சாதனை படைத்துள்ளது.

2021-ல் சுகுமார் இயக்கத்தில் உருவாகி மெகா ஹிட்டான படம் புஷ்பா. பான் இந்தியா அளவில் வெளியாகி 500 கோடி ரூபாய் வரை வசூலித்ததாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி பாகுபலி படத்துக்கு பிறகு பல மொழிகளில் ஹிட்டான தெலுங்கு படம் என்ற பெயரையும் புஷ்பா திரைப்படம் பெற்றது. அப்படத்தில் அல்லு அர்ஜுன், ஃபஹத் பாசில், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்த இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார்.

இந்த படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு அல்லு அர்ஜுன், சுகுமார் கூட்டணியில் புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி உள்ளது. புஷ்பா தி ரூல் (புஷ்பா 2) என்ற தலைப்பில் உருவாகி உள்ள இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ‘புஷ்பா’ படத்தில் ‘ஊ சொல்றியா’ என்ற பாடலுக்கு சமந்தா நடனமாடி இருந்த நிலையில், புஷ்பா -2 படத்தில் நடிகை ஸ்ரீலீலா ‘கிஸ்சிக்’ என்ற பாடலுக்கு நடனமாடியுள்ளார். இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். படத்தின் சில பாடல்கள் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

புஷ்பா 2 திரைப்படம் வரும் டிசம்பர் 5-ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தை உலகளவில் 11,000 திரைகளில் வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது. இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா பாட்னாவில் மிக பிரம்மாண்டமாக நடைப்பெற்றது. இதனையடுத்து வெளியான இப்படத்தின் டிரெய்லர் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. நேற்று முன்தினம் வெளியான டிரெய்லர் யூடியூப் தளத்தில் தற்போது வரை 12 கோடி பார்வைகளை கடந்துள்ளது.