பிரபல வில்லன் நடிகர் மரணம்.. ரசிகர்கள் அதிர்ச்சி.. பிரபலங்கள் இரங்கல்!
பிரபல தயாரிப்பாளரும், நடிகருமான மோகன் நடராஜன் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று காலமானார். அவருக்கு வயது 71.
1986-ல் மோகன் நதியா நடிப்பில் வெளிவந்த ‘பூக்களைப் பறிக்காதீர்கள்’ படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானவர் மோகன் நடராஜன். இவருக்கு ஸ்ரீ ராஜகாளியம்மன் எண்டர்பிரைசஸ் எனும் தயாரிப்பு நிறுவனம் சொந்தமாக இருக்கிறது. தொடர்ந்து நம்ம அண்ணாச்சி, சக்கரைத்தேவன், கோட்டை வாசல், புதல்வன், பிள்ளைக்காக, பாட்டுப் பாடவா, அரண்மனை காவலன், பதவிப்பிரமாணம், மகாநதி, பட்டியல் உள்ளிட்ட திரைப்படங்களில் வில்லனாக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.
பிரபுவின் ‘என் தங்கச்சி படிச்சவ’, சத்யராஜின் ‘வேலை கிடைச்சிடுச்சி’, அருண்பாண்டியனின் ‘கோட்டை வாசல்’, விஜயின் ‘கண்ணுக்குள் நிலவு’, அஜித்தின் ‘ஆழ்வார்’, சூர்யாவின் ‘வேல்’ ஆகிய படங்கள் இவரது தயாரிப்பில்தான் வெளிவந்தன. இறுதியாக விக்ரம் நடித்த ‘தெய்வத் திருமகள்’ திரைப்படத்தின் இணை தயாரிப்பாளராகவும் மோகன் நடராஜன் இருந்திருக்கிறார்.
அதன் பின்னர் உடல் நலக்குறைவு காரணமாக திரைப்படத் துறையிலிருந்து இவர் விலகியிருந்தார். தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த இவர், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது மறைவுக்கு தமிழ் திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.மோகன் நடராஜன் மறைவைத் தொடர்ந்து நடிகர் சூர்யா, இயக்குநர் வாசு உள்ளிட்ட பிரபலங்கள் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ளனர்.