அரியவகை நோயால் அவதிப்படும் பிரபல தமிழ் நடிகை..! ரசிகர்கள் அதிர்ச்சி!

 

நடிகை நந்திதா ஸ்வேதா பைப்ரோமியால்ஜியா என்ற அரியவகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

2008-ல் வெளியான ‘நந்தா லவ்ஸ் நந்திதா’ என்ற கன்னட படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நந்திதா ஸ்வேதா. அதனைத் தொடர்ந்து, 2012-ல் பா.ரஞ்சித் இயக்கிய ‘அட்டக்கத்தி’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இப்படம் அவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்ததோடு, மிகப்பெரிய திருப்புமுனையாகவும் அமைந்தது.

அட்டக்கத்தி படத்தின் வெற்றியை தொடர்ந்து எதிர்நீச்சல், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுப்பட்டி என அடுத்தடுத்து பிளாக்பஸ்டர் ஹிட் படங்களில் நடித்து பிரபலமானார். பின்னர் இவருக்கு நடிகர் விஜய்யுடன் புலி படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து தமிழில் பட வாய்ப்புகள் கிடைக்காததால் தெலுங்கு திரையுலகிற்கு தாவினார்.

தெலுங்கில் அவருக்கு அடுத்தடுத்து வித்தியாசமான வேடங்கள் கிடைத்து வருவதால் அங்கேயே செட்டில் ஆகிவிட்டார் நந்திதா. தற்போது நடிகை நந்திதா நடிப்பில் ஹிடிம்பா என்கிற தெலுங்கு திரைப்படம் தயாராகி உள்ளது. இப்படம் வருகிற ஜூலை 20-ம் தேதி திரைக்கு வர உள்ளது. இப்படத்திற்கான புரமோஷன் பணிகளும் படு ஜோராக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், ஹிடிம்பா படத்தின் புரமோஷனுக்காக பேட்டி ஒன்றை அளித்திருந்த நடிகை நந்திதா, அதில் தனக்கு இருக்கும் அரிய வகை நோய் பாதிப்பு குறித்து மனம்திறந்து பேசி உள்ளார்.

தனக்கு பைப்ரோமியால்ஜியா என்கிற தசைக் கோளாறு நோயால் அவதிப்படுவதாக அவர் கூறியுள்ளார். இந்த நோய் பாதிப்பால் உடல் எடையில் ஏற்ற இறக்கம் ஏற்படும் என்றும், ஒரு சின்ன வேலை செய்தால் கூட தசைகளில் பிரச்சனை ஏற்பட்டுவிடும் அளவுக்கு இந்த நோய் தீவிரமானது என கூறியுள்ள அவர், இதன் காரணமாக தான் கடினமான உடற்பயிற்சிகளை செய்ய முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

அது மெதுவாக உடலில் பரவி வருவதாகவும், கடந்த மூன்று வருடங்களாக இதனால் அவதிப்பட்டு வருவதாகவும். இது தூக்கமில்லாத இரவுகள் மற்றும் உடல் அழுத்தத்தால் ஏற்படுகிறது, மேலும் அது எப்போதும் உடலில் தங்கியிருப்பதால் அது ஒருபோதும் போகாது. சில சமயங்களில் உடல் அசைவுகளுக்கே கஷ்டப்படும் அளவுக்கு இதன் பாதிப்பு இருக்கும் என கூறியுள்ள அவர், இதனால விரைவில் சோர்வடைவதோடு, நினைவாற்றல் குறைபாடுகளும் ஏற்படுத்தும் என்று தெரிவித்திருக்கிறார்.

இதையெல்லாம் தாண்டி தான் ஹிடிம்பா படத்திற்காக உடல் எடையை குறைத்து நடித்ததாக நந்திதா தெரிவித்துள்ளார். நடிகை சமந்தா மயோசிடிஸ் நோய் பாதிப்பால் அவதிப்படுவதை போல் நடிகை நந்திதாவும் பைப்ரோமியால்ஜியா என்கிற நோயால் அவதிப்பட்டு வருகிறார். இது அவரது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.