கமல்ஹாசனின் படத்தில் இருந்து விலகிய பிரபல நடிகர்.. என்ன காரணம்?

 

நடிகர் கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’ படத்தில் இருந்து துல்கர் சல்மான் அதிரடியாக விலகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

1987-ல் கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் வெளியான ‘நாயகன்’ படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து 35 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தக் கூட்டணி மீண்டும் இணைகிறது. தக் லைஃப் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்திற்கு ஏ. ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ், கமலின் ராஜ்கமல் நிறுவனம், மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் ஆகியவை இணைந்து தயாரிக்கின்றன.

இந்தப் படத்தில் நடிகர்கள் ஜெயம் ரவி, த்ரிஷா, துல்கர் சல்மான் எனப் பலரும் நடிக்கின்றனர் என்ற அறிவிப்பை படக்குழு அதிகாரப்பூர்வமாக உறுதி செய்தது. இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நிறைவடைந்துள்ள நிலையில், அடுத்தக்கட்ட படப்பிடிப்பு செர்பியாவில் நடைபெற்று வருகிறது. இதில், த்ரிஷா, கமல்ஹாசன் காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், தக் லைஃப் படத்தில் இருந்து துல்கர் சல்மான் விலகி விட்டதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது, துல்கர் சல்மான் கையில் தற்போது ‘சூர்யா 43’, ‘காந்தா’ மற்றும் ‘லக்கி பாஸ்கர்’ ஆகிய படங்கள் உள்ளது. தேதி ஒதுக்கீடு பிரச்சினைகள் காரணமாக அவர் ‘தக் லைஃப்’ படத்தில் இருந்து விலகுகிறார் என சொல்லப்படுகிறது. நடிகர் சூர்யாவின் தீவிர ரசிகர் துல்கர். அதனால், ‘சூர்யா43’ படத்தில் நடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்.

அதேசமயத்தில் தேதிகள் பிரச்சினையும் சிக்கலை உருவாக்கியுள்ளதால் ‘தக் லைஃப்’ படத்தில் இருந்து விலக வேண்டும் என்ற கடினமான முடிவை அவர் எடுத்துள்ளதாகவும் தெரிகிறது. கமலுடன் துல்கர் நடிப்பதைப் பார்க்கலாம் என ஆவலுடன் இருந்த ரசிகர்களுக்கு இது பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது. துல்கருக்குப் பதிலாக, ‘தக் லைஃப்’ படத்தில் யார் நடிப்பார் என்ற ஆர்வமும் எழுந்துள்ளது.