எங்களை மன்னித்து விடுங்கள்.. இயக்குநர் மணிகண்டன் வீட்டில் திருடிய தேசிய விருதை தொங்கவிட்டுச் சென்ற மர்ம நபர்கள்!

 

இயக்குநர் மணிகண்டன் வீட்டில் மன்னிப்பு கடிதத்துடன் தேசிய விருதுகளை கொள்ளை கும்பல் தொங்க விட்டு சென்றுள்ளனர்.

2015-ம் ஆண்டு வெளியான ‘காக்கா முட்டை’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் மணிகண்டன். தொடர்ந்து குற்றமே தண்டனை, ஆண்டவன் கட்டளை, கடைசி விவசாயி போன்ற படங்களை இயக்கியுள்ளார். இதில் காக்கா முட்டை மற்றும் கடைசி விவசாயி தேசிய விருது பெற்ற படங்களாகும். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள விளாம்பட்டி தான் மணிகண்டனின் சொந்த ஊர். இவரது சொந்த வீடும் அலுவலகமும் உசிலம்பட்டி எழில் நகரில் உள்ளது. கடந்த 2 மாதங்களாக தனது அடுத்த படத்தின் வேலைக்காக தனது குடும்பத்தினருடன் சென்னை வந்துள்ளார்.

இதனையடுத்து உசிலம்பட்டியில் உள்ள மணிகண்டன் வீட்டில் யாரும் இல்லாததைத் தெரிந்துக் கொண்ட மர்ம நபர்கள், பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த ரூ.1 லட்சம் மற்றும் 5 பவுன் நகைகளை திருடிச் சென்றுள்ளனர். கூடவே அவரது இரண்டு தேசிய விருது பதக்கங்களையும் எடுத்துச் சென்றனர். இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக உசிலம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இயக்குநர் மணிகண்டன் வீட்டில் பணம், நகை மற்றும் பதக்கங்களை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள், மணிகண்டனின் வீட்டு வாசலில் ஒரு பாலிதீன் பையில், தேசிய விருதுக்கான வெள்ளி பதக்கங்களை மட்டும் திரும்ப வைத்துச் சென்றுள்ளனர். அத்துடன் ஒரு கடிதத்தையும் விட்டுச் சென்றுள்ளனர்.

அதில், “அய்யா எங்களை மன்னித்து விடுங்கள் உங்கள் உழைப்பு உங்களுக்கு” என்று எழுதி வைத்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்து மணிகண்டனின் வீட்டுக்கு வந்த போலீசார் தேசிய விருது பதக்கங்களையும், அந்த கடிதத்தையும் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.