பத்மஸ்ரீ விருது பெற்ற பிரபல பாடகர் மரணம்.. ரசிகர்கள் அதிர்ச்சி!

 

பிரபல பாலிவுட் பாடகர் உஸ்தாத் ரஷித் கான் இன்று காலமானார். அவருக்கு வயது 55.

இந்திய கிளாசிகல் மற்றும் ஹிந்துஸ்தானி பாரம்பரிய இசையில் தேர்ந்தவரான உஸ்தாத் ரஷீத் கான், பல ஆல்பம் பாடல்களை வெளியிட்டுள்ளார். பாலிவுட்டில் பல வெற்றிப் படங்களின் பாடல்களை பாடி ஏராளமான ரசிகர்களை கொண்டவரான உஸ்தாத் ரஷீத் கான், பத்மஸ்ரீ விருது பெற்றவர். கடந்த 2022ம் ஆண்டில் இவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது. பிரபல பாடகர் இனாயத் ஹுசையன் கானின் பேரனான ரஷீத் கான், புற்று நோயால் பாதிக்கப்பட்டு கொல்கத்தாவின் பீர்லெஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று பிற்பகல் 3.45 மணியளவில் அவர் காலமானார்.

அவரது மறைவு செய்தியை கேள்விப்பட்ட மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மருத்துவமனைக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து ரஷீத் கானின் மறைவு ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் இசை உலகிற்கும் பேரிழப்பு என்று அவர் கூறியுள்ளார். அவரது மறைவு தனக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்துள்ளதாகவும் அவர் காலமான செய்தியை இதுவரை தன்னால் நம்ப முடியவில்லை என்றும் மம்தா மேலும் கூறியுள்ளார். முன்னதாக டாடா மெமோரியல் கேன்சர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ரஷீத் கான், பீர்லெஸ் மருத்துவமனையில் சிசிக்சை பெற்றுள்ளார்.

தன்னுடைய மாமா நிசார் ஹுசைன் கானிடம் துவக்கத்தில் இசையை கற்றுக் கொண்ட ரஷீத் கான், தன்னுடைய 11வது வயதில் முதல் இசைக் கச்சேரியை நடத்தினார். தொடர்ந்து பல இசைக் கச்சேரிகளை நடத்தியுள்ளார். பாரத ரத்னா பண்டிட் பீம்சென் ஜோஷி, ரஷீத் கானின் குரலை, இந்திய குரல் இசையின் எதிர்கால நம்பிக்கை என்று ஒருமுறை பாராட்டியுள்ளார். இந்நிலையில் அந்த எதிர்கால நம்பிக்கை தற்போது தகர்ந்துள்ளதாக ரசிகர்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர். பாலிவுட்டில் மட்டுமில்லாமல் டோலிவுட்டிலும் ரஷீத்கான் சினிமாவில் பாடல்கள் பாடியுள்ளார்.

இவருக்கு மனைவி, இரு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். ரஷீத் கானின் மறைவு திரையுலக பிரபலங்கள், ரசிகர்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். அவரது உடல் இன்று மாலை வரையில் ரசிகர்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு நாளைய தினம் குடும்ப முறைப்படி இறுதி சடங்குகள் நடத்தப்பட உள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.