பத்மஸ்ரீ விருது பெற்ற பாடகர் பங்கஜ் உதாஸ் காலமானார்.. திரையுலகினர் அதிர்ச்சி!

 

பழம்பெரும் கசல் பாடகர் பங்கஜ் உதாஸ் இன்று காலை உடல் நிலை குறைவு காரணமாக் காலமானார். அவருக்கு வயது 72.

குஜராத் மாநிலத்தை சேர்ந்த பங்கஜ் உதாஸ், ராஜ்கோட்டில் உள்ள சங்கீத நாடக அகாடமியில் தபேலா பயிற்சி பெற்றார். குஜராத்தில் இருந்து பங்கஜ் குடும்பம் மும்பைக்கு குடிபெயர்ந்தது. அப்போது தன் தம்பியுடன் சேர்ந்து மேடைக் கச்சேரிகளில் பங்கஜ் உதாஸ் பாடத் தொடங்கினார். தொடர்ச்சியாக பாலிவுட் திரையுலகில் தடம்பதித்த பங்கஜ் உதாஸ், நூற்றுக்கணக்கான திரைப் பாடல்களை பாடியுள்ளார்.

கடந்த 2018-ம் ஆண்டு வரை அவர் திரையிசை மற்றும் கஜல் கச்சேரிகளை அரங்கேற்றி வந்தார். கஜல் உலகின் முடிசூடா மன்னன் என போற்றப்பட்ட இவர், 1980-ல் வெளியான ‘ஆஹத்’ (Aahat) ஆல்பம் மூலம் தனது இசைப்பயணத்தைத் தொடங்கினார். 2011-ம் ஆண்டு வரை அவர் 50 ஆல்பம் பாடல்களை பாடியுள்ளார்.

‘நாம்’ (NAAM) இந்தி படத்தில் வெளியான ‘சிட்டி ஆயி ஹை’ (Chitti Aayi Hai) பாடல் மிகவும் பிரபமானது. ‘காயல்’, ‘மொஹ்ரா’ படத்தில் இவர் பாடிய பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றன. ‘ஜீயே தோ ஜீயே கைசே’, ‘சுப்கே சுப்கே’, ‘கஜ்ரே கி தரில்’ உள்ளிட்ட பாடல்கள் இன்றும் ரசிகர்களின் விருப்பப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. பத்மஸ்ரீ மட்டுமல்லாது தனது 40 ஆண்டுகளுக்கும் மேலான இசை பயணத்தில் மேலும் பல மதிப்புமிக்க விருதுகளையும் வென்றுள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவருக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டதாகவும், இதனால், அவர் யாரையும் சந்திக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. உடல் நிலை சரியில்லாது இருந்த பங்கஜ் மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று காலை 11 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதுகுறித்து அவரது மகள் நயாப் உதாஸ் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், பத்மஸ்ரீ பங்கஜ் உதாஸ் நீண்டகால நோயின் காரணமாக 26 பிப்ரவரி 2024 அன்று இறந்தார் என்பதை மிகவும் கனத்த இதயத்துடன் உங்களுக்குத் தெரிவிப்பதில் வருந்துகிறோம் - உதாஸ் குடும்பம் என்று தெரிவித்துள்ளார். பாடகர் பங்கஜ் உதாஸின் இறுதிச் சடங்குகள் நாளை (பிப்ரவரி 27) நடைபெறும் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.