மருத்துவமனையில் மோகன்லால்.. வெளியான ரிப்போர்ட்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!
மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான மோகன்லால் தீவிர காய்ச்சல், மூச்சுத்திணறல் காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மலையாள திரையுலகின் முன்னணி நடிகர் மோகன்லால். தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார் மோகன்லால். மணிரத்னம் இயக்கத்தில் வெளியான இருவர் படத்தில் நடித்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய இவர், பிரபுவுடன் இணைந்த சிறைச்சாலை படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். இதைத்தொடர்ந்து கமல்ஹாசன் உடன் உன்னைப்போல் ஒருவன் படத்திலும், விஜய்யுடன் ஜில்லா, சூர்யாவுடன் காப்பான் உள்ளிட்ட படங்களில் நடித்த மோகன்லால், அண்மையில் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த சக்கைப்போடு போட்ட ஜெயிலர் படத்தில் கேமியோ ரோலில் மாஸ் காட்டி இருந்தார்.
இந்நிலையில், நடிகர் மோகன்லால் கடுமையான காய்ச்சல், மூச்சு திணறல், தசை வலி உள்ளிட்டவையால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதையடுத்து, கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் நடிகர் மோகன்லால் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள மருத்துவமனை நிர்வாகம், “64 வயதாகும் மோகன்லாலுக்கு, கடுமையான காய்ச்சல், முச்சுத் திணறல் மற்றும் தசை வலி ஏற்பட்டுள்ளது. அவருக்கு சுவாச தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம். ஐந்து நாட்கள் ஓய்வுடன் சிகிச்சை மேற்கொள்ளவும், பொது இடங்களுக்குச் செல்வதை தவிர்க்கவும் அறிவுறுத்தியுள்ளோம்” என்று தெரிவித்துள்ளது.
மோகன்லால் விரைந்து குணமடைய சமூக வலைதளங்களில் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தற்போது மோகன்லால் ‘லூசிபர் 2’ படத்தில் நடித்து முடித்துள்ளார். முன்னதாக தான் இயக்கி நடித்துள்ள ‘பர்ரோஸ்’ படத்தின் இறுதிகட்ட பணிகளிலும் கவனம் செலுத்தி வருகிறார். அண்மையில் குஜராத்திலிருந்து திரும்பிய அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.