மேகா ஆகாஷிற்கு விரைவில் டும் டும் டும்.. சத்தமே இல்லாமல் காதலருடன் நடந்த நிச்சியதார்த்தம்!
நடிகை மேகா ஆகாஷ் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றதை புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்.
2019-ல் ரஜினி நடிப்பில் வெளியான ‘பேட்ட’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மேகா ஆகாஷ். இந்த படத்தைத் தொடர்ந்து சிம்புவின் வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார். ஆனால், அந்த படம் சுமாராகக்கூட ஓடவில்லை. இதனால், என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தை பெரிதும் எதிர்பார்த்து இருந்தார். இந்த படத்தில் இடம் பெற்ற மறுவார்த்தை பேசாதே, மடிமீது நீ தூங்கு பாடல் மிகப்பெரிய அளவில் டிரெண்டானது. பாடல் ஹிட்டான அளவிற்கு படம் ஹிட்டாகவில்லை.
அதன் பின், படவாய்ப்பே இல்லாமல் இருந்த இவர் அசோக் செல்வனுடன் சேர்ந்து சபாநாயகன்படத்தில் நடித்தார். பின் சந்தானம் நடிப்பில் கடந்த பிப்ரவரியில் வெளியான வடக்குப்பட்டி ராமசாமி படத்தில் நடித்திருந்தார். அதன் பின் விஜய் ஆண்டனி நடிப்பில் விஜய் மில்டன் நடிப்பில் உருவாக மழை பிடிக்காத மனிதன் படத்தில் நடித்திருந்தார். இந்த படம் ஆகஸ்ட் 2 முதல் வெளியானது. ஆனால் படம் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இல்லாததால், படம் வெளியான வேகத்தில் ஓடிடிக்கு வந்துவிட்டது.
நடிகை மேகா ஆகாஷிற்கு அடுத்தடுத்த படவாய்ப்பு வந்த போதும், தனது திறமையை நிரூபிக்கும் வகையில், எந்த படமும் அமையாததால், திருமணம் செய்து கொண்டு செட்டிலாக முடிவு செய்த மேகா, தன்னுடைய நீண்ட நாள் காதலனான சாய் விஷ்ணுவை திருமணம் செய்து கொள்ள உள்ளார். இவர்களின் நிச்சயதார்த்தம் கோவளம் அருகே உள்ள திருவிடந்தை கிராமத்தில் உள்ள நித்ய பெருமாள் கோயில் அருகே உள்ள திருமண மண்டபத்தில் நேற்று மிகவும் எளிமையாக நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றுள்ளது.
A post shared by Megha Akash (@meghaakash)
இந்நிலையில், நடிகை மேகா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றதை புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார். அதில், “என்னுடைய விருப்பம் உண்மையாகிவிட்டது. இனி என்றென்றும் காதல், சிரிப்பு, மகிழ்ச்சி. என் வாழ்வின் காதலுடன் எனக்கு நிச்சயம் செய்யப்பட்டுள்ளது” என்று பதிவிட்டுள்ளார். திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் மேகா ஆகாஷ்க்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.