மாரி செல்வராஜ் ஒரு தலைசிறந்த இயக்குநர்.. நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு
‘வாழை’ திரைப்படத்தைப் பார்த்த நடிகர் ரஜினிகாந்த், மாரி செல்வராஜ் தான் ஒரு தலைசிறந்த இயக்குநர் என்று கூறியுள்ளார்.
பரியேறும் பெருமாள், கர்ணன் மற்றும் மாமன்னன் திரைப்படத்தை தொடர்ந்து மாரி செல்வராஜ் வாழை என்ற படத்தை இயக்கி தயாரித்துள்ளார். தனது சிறுவயது வாழ்க்கையை மையப்படுத்தி இப்படத்தை மாரி செல்வராஜ் உருவாக்கியுள்ளார். மேலும் நிகிலா விமல், திவ்யா துரைசாமி, 'வெயில்' படம் மூலம் பிரபலமான பிரியங்கா மற்றும் சில சிறுவர்கள் நடித்துள்ளனர். இந்நிலையில் அதிக எதிர்பார்ப்பின்றி வாழை திரைப்படம் கடந்த மாதம் 23-ம் தேதி வெளிவந்தது. இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார்.
குறைவான பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இந்த படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக இந்த படத்தை பார்த்துவிட்டு, நடிகர் சூரி, சிவகார்த்திகேயன், இயக்குனர் பாலா உள்ளிட்ட பிரபலங்கள், இயக்குனர் மாரி செல்வராஜை பாராட்டினர்.
குறைந்த பட்ஜெட்டில் படம் தயாரிக்கப்பட்டிருந்தாலும் வெளியான முதல் வாரத்தில் மட்டும் ரூ. 16 கோடிக்கும் அதிகமாக வசூலித்து நல்லதொரு அங்கீகாரத்தை பெற்றுள்ளது. இந்நிலையில் வாழை திரைப்படத்தை பார்த்துவிட்டு நடிகர் ரஜினிகாந்த் மனதார பாராட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதள பக்கங்களில் கூறியிருப்பதாவது, மாரி செல்வராஜ் அவர்களுடைய வாழை படம் பார்த்தேன். ஒரு அற்புதமான தரமான படம் தமிழில் ரொம்ப நாளைக்கு அப்புறம் வந்திருக்கு. மாரி செல்வராஜ் தன்னுடைய இளமை பருவத்திற்கே நம்மை அழைத்து சென்றிருக்கிறார். அதில் அந்த பையன் அனுபவிக்கும் துன்பங்கள், கஷ்டங்கள் அதை நாமே அனுபவிப்பது போல் போன்ற உணர்வு ஏற்படுகிறது. கிளைமாக்ஸ்சில் அந்தப் பையன் பசியை தாங்காமல் அலையும் போது, அந்த தாய் என் பையனுக்கு ஒரு கைச்சோறு சாப்பிட விடவில்லையே என கதறும் போது நமது நெஞ்சமெல்லாம் துடிக்கின்றது.