மம்முட்டி - ஜோதிகா நடிக்கும் ‘காதல் தி கோர்’.. எப்போது வெளியாகும்? லேட்டஸ்ட் அப்டேட்!

 

மம்மூட்டி - ஜோதிகா நடிப்பில் உருவாகியுள்ள ‘காதல் - தி கோர்’ படம் டிசம்பர் மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2021-ம் ஆண்டு வெளியான ‘உடன்பிறப்பே’ படத்தில் நடிகை ஜோதிகா கடைசியாக நடித்திருந்தார். இந்த படத்திற்கு பிறகு மலையாள நடிகர் மம்மூட்டியுடன் இணைந்து ஓர் புதிய படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. அதன் பின்னர், ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ படத்தை இயக்கிய ஜோ பேபியின் இயக்கத்தில் மம்மூட்டி - ஜோதிகா நடிக்க போகிறார்கள் என்ற அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது. அந்த படத்திற்கு ‘காதல் - தி கோர்’ என்று பெயரிடப்பட்டது.

இந்த படத்திற்கான படப்பிடிப்பு கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கியது. எர்ணாகுளத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்த இந்த படத்தின் படப்பிடிப்பிற்கு இடையில் நடிகர் சூர்யா படப்பிடிப்பு தளத்தை விசிட் செய்து படக்குழுவினருக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்தார். வெறும் 34 நாட்களிலேயே படத்திற்கான மொத்த படப்பிடிப்புகளும் முடிந்துவிட்டது.

அதன் பிறகு 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் இறுதியில் தான் இந்த படத்திற்கான போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் தொடங்கப்பட்டது. காதல் - தி கோர் படத்தை ஜியோ சினிமாஸ் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியிட படக் குழு திட்டமிட்டிருந்தது.

இந்நிலையில் தற்போது இந்த படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்யாமல் நேரடியாக திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து சமீபத்தில் வெளியான தகவலின் படி, வரும் நவம்பர் 20 முதல் 28-ம் தேதி வரை நடக்க இருக்கும் கோவா ஃபிலிம் ஃபெஸ்டிவல் நிகழ்ச்சியில் தான் “காதல் தி கோர்” படம் முதலில் திரையிடப்படும் என்று கூறப்படுகிறது.

அதன் பிறகு வரும் டிசம்பர் மாதம் காதல் - தி கோர் படம் திரையரங்குகளில் வெளியாக அதிக வாய்ப்புள்ளது என்றும் சொல்லப்படுகிறது. இப்படம் மூலம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மலையாளத்தில் ரீ என்ட்ரி கொடுக்கிறார் ஜோதிகா. மேலும் முன்னணி நட்சத்திரமான மம்மூட்டியுடன் முதல் முறையாக நடித்துள்ளதால் ரசிகர்கள் மத்தியில் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.