லியோ படத்திற்கு தொடர் சிக்கல்.. பாஜக பரபரப்பு குற்றச்சாட்டு!

 

விஜய் நடித்துள்ள லியோ படத்திற்கு எதிராக பாஜக சார்பில் மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்தின் தலைவருக்கு புகார் கொடுக்கப்பட்டுள்ளது. 

‘வாரிசு’ படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் நடித்துள்ள படம் ‘லியோ’. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ளார். மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பின்னர் விஜய்யும், லோகேஷும் மீண்டும் இணைந்து உள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார். பிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்துள்ளார். இந்த படத்தில் நடிகர் அர்ஜுன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், நடிகை த்ரிஷா, நடிகை பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், இயக்குநர் மிஸ்கின், இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன், டான்ஸ் மாஸ்டர் சாண்டி, மலையாள நடிகர் மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ‘லியோ’ திரைப்படம் அக்டோபர் மாதம் 19-ம் தேதி வெளியாக உள்ளது. சமீபத்தில் இப்படத்தின் இரண்டாவது பாடலான ‘BADASS’ பாடலின் லிரிக் வீடியோ வெளியாகி அதிவேகமாக வைரலானது. இந்த நிலையில் லியோ படத்தின் டிரெய்லர் கடந்த 5-ம் தேதி மாலை 6.30 மணிக்கு வெளியாகி வரவேற்ப்பை பெற்றது.

இதையடுத்து வெளியான டிரெய்லரில் விஜய் பேசிய வசனம் ஒன்று பலரை முகம் சுளிக்க வைத்தது. மேலும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அதை நீக்கக் கோரி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அதே வேளையில், சென்னையில் ரோகிணி திரையரங்கில் டிரெய்லர் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட ரசிகர்கள் திரையரங்கின் இருக்கைகளை உடைத்திருந்தனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. 

இந்த நிலையில் லியோ படக்குழுவிற்கு எதிராக பாஜக சார்பில் மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்தின் தலைவருக்கு புகார் கொடுக்கப்பட்டுள்ளது. தணிக்கை குழுவில் உறுப்பினர்களில் ஒருவராக இருக்கும் பாஜகவை சார்ந்த ராஜரத்தினம் என்பவர், சில குற்றச்சாட்டுகளை வைத்து இந்தப் புகாரை கொடுத்துள்ளார். அந்த புகாரில், “லியோ படத்தின் டிரெய்லர் தற்போது தமிழ்நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இதன் டீசர் கடந்த பிப்ரவரி 10ம் தேதி தணிக்கை வாரியத்தால் யு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. 

திரையரங்கில் நடந்த சில வன்முறைகள் குறித்தும் நீதிமன்றம் விசாரணை நடத்தி வருகிறது. பொது மக்களின் பார்வையில், டிரெய்லர் படத்தின் சில வசனங்கள் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் இருப்பதாக பலரும் கூறியுள்ளனர். எனவே லியோ படத்தின் டிரெய்லர் சான்றிதழ் இல்லாமல் தியேட்டர்களில் வெளியானது எப்படி என்பது குறித்து விசாரித்து முழுப் படத்துக்கும் சான்றிதழ் வழங்க வேண்டும்” என கேட்டுக்கொண்டுள்ளார்.