சாதனை படைத்த ‘லியோ’ டிரெய்லர்.. ரசிகர்கள் கொண்டாட்டம்!

 

விஜய் நடித்துள்ள ‘லியோ’ படத்தின் டிரெய்லர் நேற்று வெளியான நிலையில் சாதனை படைத்துள்ளது.

‘வாரிசு’ படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் நடித்துள்ள படம் ‘லியோ’. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ளார். மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பின்னர் விஜய்யும், லோகேஷும் மீண்டும் இணைந்து உள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார். பிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்துள்ளார். இந்த படத்தில் நடிகர் அர்ஜுன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், நடிகை த்ரிஷா, நடிகை பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், இயக்குநர் மிஸ்கின், இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன், டான்ஸ் மாஸ்டர் சாண்டி, மலையாள நடிகர் மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ‘லியோ’ திரைப்படம் அக்டோபர் மாதம் 19-ம் தேதி வெளியாக உள்ளது. சமீபத்தில் இப்படத்தின் இரண்டாவது பாடலான ‘BADASS’ பாடலின் லிரிக் வீடியோ வெளியாகி அதிவேகமாக வைரலானது. இந்த நிலையில் லியோ படத்தின் டிரெய்லர் நேற்று (அக். 5) மாலை 6.30 மணிக்கு வெளியாகும் என்று படத்தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது.

அதன்படி, நேற்று மாலை 6.30 மணிக்கு லியோ படத்தின் டிரெய்லர் சன் டிவி யூடியூப் தளத்தில் வெளியானது. டிரெய்லர் வெளியான திரையரங்குகளிலும், சமூக வலைதளங்களிலும் அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். லியோ பட டிரெய்லர் வெளியான 20 நிமிடத்திலேயே 1 மில்லியன் லைக்குகளை கடந்து சாதனை படைத்தது.

இந்த நிலையில் இதுவரை விஜய்யின் லியோ பட டிரெய்லர் 27 மில்லியன் பார்வையாளர்களையும் 2.5 மில்லியன் லைக்ஸ் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது என்பதும் குறி்பிடத்தக்கது.