விரைவில் ‘லியோ’ பட சென்சார் அப்டேட்.. உற்சாகத்தில் விஜய் ரசிகர்கள்!

 

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘லியோ’ படத்தின் தணிக்கை வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.

‘வாரிசு’ படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் நடித்துள்ள படம் ‘லியோ’. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ளார். மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பின்னர் விஜய்யும், லோகேஷும் மீண்டும் இணைந்து உள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார். பிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்துள்ளார். இந்த படத்தில் நடிகர் அர்ஜுன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், நடிகை த்ரிஷா, நடிகை பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், இயக்குநர் மிஸ்கின், இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன், டான்ஸ் மாஸ்டர் சாண்டி, மலையாள நடிகர் மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இதற்கான படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்து இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வந்தன. இந்த நிலையில் படத்தின் அனைத்து வேலைகளும் நிறைவடைந்துள்ளது. மேலும் படத்தை தணிக்கைக்குழுவுக்கு தயாரிப்பு நிறுவனம் அனுப்பியுள்ளது. விஜய் நடிப்பில் உருவான திரைப்படங்களில் வெளியீட்டுக்கு 22 நாட்களுக்கு முன்பே தணிக்கைக்கு விண்ணப்பித்த திரைப்படம் என்ற பெயரை லியோ பெற்றுள்ளது. இந்த திரைப்படத்திற்கு என்ன சான்றிதழ் கிடைக்கப் போகிறது என்பதை விஜய் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கின்றனர்.

லியோ திரைப்படத்திற்கு பாடல் வெளியீட்டு விழா நடைபெறுவதாக இருந்தது. ஆனால் அனுமதி கிடைக்காத காரணத்தால் படப்பிடிப்பை தயாரிப்பு நிறுவனம் ரத்து செய்தது. மேலும் அரசியல் அழுத்தம் இல்லை என்றும் கூறினர். இருந்தாலும் விஜய் ரசிகர்கள் அவரின் பேச்சை கேட்க முடியவில்லை என்ற வருத்தத்தில் உள்ளனர்.

அவர்களுக்கு உற்சாகம் கொடுக்கும் வகையில் விரைவில் படத்தின் ட்ரெய்லரை வெளியிட உள்ளனர். அதைத் தொடர்ந்து அடுத்த பாடல் என விஜய் ரசிகர்களுக்கு லியோ தயாரிப்பு நிறுவனம் ட்ரீட் கொடுக்க திட்டமிட்டு இருக்கிறது.