லீக்கான ‘கூலி’ பட காட்சிகள்.. 2 மாத உழைப்பு வீணாய் போய் உள்ளது.. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வேதனை!

 

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘கூலி’ படத்தின் ஒரு காட்சி சமூகவலைதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.

மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற அதிரடி படங்களை இயக்கி, விமர்சன ரீதியாக பெரும் வெற்றியடைந்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ். தற்போது ரஜினிகாந்த் நடிப்பில் ‘கூலி’ படத்தை இயக்கி வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் நடித்து வரும் முன்னணி நடிகர்கள் முக்கிய பாத்திரங்களில் நடித்து வருகின்றனர். அந்த வகையில் சவுபின் ஷாயிர், நாகர்ஜுனா, சுருதிஹாசன், சத்யராஜ், உபேந்திரா ஆகியோர் இதில் நடிக்கின்றனர். 'தேவா' என்ற பெயர் கொண்ட கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடிக்கிறார்.

கூலி படத்தினைப் பொறுத்தவரையில், படத்தின் படப்பிடிப்பு விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகின்றது. அண்மையில் அங்கு கனமழை பெய்தபோதுகூட படத்தின் படப்பிடிப்பு ஒத்திவைக்கப்பட்டது. அதேபோல் கூலி படத்தின் படப்பிடிப்பின்போது சிறிய விபத்து ஏற்பட்டதாகவும், நல்வாய்ப்பாக யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை என்றும் தகவல்கள் வெளியானது.

இந்த நிலையில் கூலி திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகர்ஜுனா தொடர்பான படப்பிடிப்புக் காட்சிகளை இணையத்தில் மர்ம நபர்கள் வெளியிட்டனர். படப்பிடிப்பு காட்சிகள் இணையத்தில் வெளியானதால் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட ஒட்டுமொத்த படக்குழுவினரும் கடும் அதிருப்தியில் உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.