லிங்கை கிளிக் செய்ததால் காணாமல் போன லட்சங்கள்.. பாடகி சின்மயி மாமனாரிடம் நூதன மோசடி
மின் கட்டணம் செலுத்தவில்லை என செல்போனில் தொடர்பு கொண்டு பேசி, பாடகி சின்மயி மாமனாரிடம் நூதன முறையில் பணத்தை மர்ம நபர் மோசடி செய்துள்ள சம்பவம் அறங்கேறியுள்ளது.
இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் வெளியான ‘கன்னத்தில் முத்தமின்னால்’ படத்தில் இடம்பெற்ற ‘ஒரு தெய்வம் தந்த பூவே’ என்ற பாடல் மூலம் சின்மயி பின்னணி பாடகியாக தன் பயணத்தை தொடங்கினார். அதன் பின்பு ஏராளமான தமிழ் பாடல்களை பாடினார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் பல பாடல்களை பாடியுள்ளார்.
இவர் தமன்னா, சமீரா ரெட்டி, சமந்தா, திரிஷா உளளிட்டோருக்கு டப்பிங் பேசியுள்ளார். திரிஷா நடித்த விண்ணைத் தாண்டி வருவாயா படத்திற்கு டப்பிங் பேசியிருந்தார். இதையடுத்து தெலுங்கில் அதே படத்திற்கு சமந்தாவுக்கும் இந்தியில் எமி ஜாக்சனுக்கும் பேசியிருந்தார். சிறந்த டப்பிங் கலைஞருக்கான நந்தி விருதை பெற்றுள்ளார்.
இவர் ராகுல் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களுக்கு இரட்டை குழந்தைகள் இருவர் உள்ளனர். பெண்களுக்கு நடக்கும் பாலியல் தொல்லைகள் குறித்து வெளியுலகிற்கு கொண்டு வருபவர். அதுபோல் பத்ம சேஷாத்ரி, கேளம்பாக்கம் பள்ளிகளில் மாணவிகளுக்கு நடந்த பாலியல் வக்கிரங்களையும் தோலுரித்து காட்டியவர்.
இந்த நிலையில், சென்னை அபிராமபுரம், டாக்டர் ரங்கா சாலையில் வசிக்கும் பாடகி சின்மயி மாமனார் ரவீந்திரனின் செல்போனுக்கு மின் கட்டணம் செலுத்தவில்லை என குறுஞ் செய்தி அனுப்பி லட்சக் கணக்கான பணத்தை மர்ம நபர்கள் அபகரித்துள்ளனர். இது குறித்து அவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரில், எனது செல்போனுக்கு கடந்த 11-ம் தேதி தமிழ்நாடு மின்சார வாரியம் என குறிப்பிட்டு குறுஞ் செய்தி ஒன்று வந்தது. அதில், நான் மின் கட்டணம் இன்னும் செலுத்தவில்லை என்றும், உடனடியாக மின் கட்டணம் செலுத்தவில்லையென்றால், மின்சார இணைப்பு துண்டிக்கப்படும் என்றும் கூறப்பட்டிருந்தது.
மேலும், அத்துடன், ஒரு செல்போன் எண் அனுப்பப்பட்டிருந்தது. அந்த எண்ணை தொடர்பு கொண்டபோது, எனது மின்சார பயனீட்டாளர் எண் மற்றும் ஒரு லிங்க் அனுப்பி அதன் மூலம் 10 ரூபாய் பணம் செலுத்தி உறுதிபடுத்திக் கொள்ளுமாறு தெரிவித்தார். அப்போது, எனது எஸ்பிஐ ஏடிஎம் கார்டு மூலம் 10 ரூபாய் செலுத்த முயன்றபோது தொழில்நுட்ப கோளாறு காரணமாக பணம் செலுத்த இயலவில்லை.
இதுகுறித்து பாடகி சின்மயி வெளியிட்டுள்ள பதிவில், “எங்கள் குடும்பத்தில் வயதானவரிடம் மின்சார கட்டணம் என்ற பெயரில் மோசடி நடைபெற்றுள்ளது. ஒ.டி.பி எண் பகிரப்படாமலேயே இந்த மோசடியை எப்படி செய்தார்கள் என்பது கொடுமையாக இருக்கிறது. செல்போனுக்கு வந்த லிங்கை க்ளிக் செய்ததும் வங்கிக் கணக்கில் இருந்த பணம் காணாமல் போய் விட்டது. வயதானவர்களைக் குறி வைத்து இது போன்ற மோசடி நடக்கிறது. சைபர் கிரைமில் புகார் செய்துள்ளோம். உங்களுக்குத் தெரிந்த வயதானவர்களிடம் சொல்லி அவர்களைப் பாதுகாக்கவும்” என்று தெரிவித்துள்ளார்.