‘சேரி மொழி’ விளக்கம் கொடுத்த குஷ்பு.. பிரபல நடிகை கண்டனம்!

 

‘சேரி மொழி’ என்ற வார்த்தைக்கு நடிகை குஷ்பு விளக்கம் அளித்துள்ள நிலையில் நடிகை காயத்ரி ரகுராம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

லியோ படத்தில் நடித்த மன்சூர் அலிகான் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது நடிகை த்ரிஷா இந்த படத்தில் நடித்தார் என எனக்கு தெரிந்தவுடன் அவரை பலாத்காரம் செய்யும் காட்சிகள் இருக்கும் என நினைத்தேன். ஆனால் இல்லாமல் போய்விட்டது. இருந்திருந்தால் குஷ்பு உள்ளிட்டோருடன் அந்த காட்சிகளில் நடித்தது போல் நடித்திருப்பேன் என தெரிவித்தார்.

இந்த பேச்சுக்கு பலர் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். பெண்கள் என்ன பலாத்காரம் செய்யும் பொருளா என்ற கேள்வி எழுந்துள்ளது. காமெடி என்ற பெயரில் இப்படி வன்மத்தை கக்குவதா என்றும் விமர்சனங்கள் வந்தன. நடிகை த்ரிஷாவும் இது போல் மனிதத்தன்மை இல்லாத ஒருவருடன் இனி நான் எந்த படத்திலும் நடிக்க மாட்டேன் என கூறி கண்டித்திருந்தார்.

இதையடுத்து, நடிகர் மன்சூர் அலிகானுக்கு எதிராக கண்டனம் தெரிவித்த நடிகை குஷ்பு, இந்த விவகாரத்தில் தேசிய மகளிர் ஆணையம் நடவடிக்கை எடுக்கும் என்றும் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். குஷ்புவின் இந்த பதிவுக்கு திமுகவை சேர்ந்த ஷண்முகம் சின்னராஜ் என்பவர், குஷ்பு மற்றும் பாஜகவை தரக்குறைவாக விமர்சித்து பதிலுக்கு டிவிட்டியிருந்தார். இதனால், ஆத்திரமடைந்த குஷ்பு, திமுக ஆதரவாளர் ஒருவர் இது தொடர்பாக செய்த சர்ச்சைக்குரிய பதிவை மேற்கோள் காட்டி, சில திமுகவினர் பெண்களை அவமதிக்க தவறான மொழியை கையாள்வதாக பதிவிட்டார். அத்துடன், உங்களைப் போல் ‘சேரி’ மொழியில் பேச முடியாது என்றும் பதிவிட்டிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

சேரி மொழி என்று கூறி தாழ்த்தப்பட்ட மக்களை அவர் இழிவுபடுத்துயுள்ளார் என பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், தனது சொல்லாடலை நியாயப்படுத்தும் விதமாக தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினரும், நடிகையுமான குஷ்பு எக்ஸ் தளத்தில் விளக்கமளித்தார். அவரளித்துள்ள விளக்கத்தில், பட்டியலின மக்களின் உரிமைகளுக்காக தாம் எப்போதும் முன்னணியில் நிற்பேன் என்றும், பிரெஞ்சு மொழியில் சேரி என்ற சொல்லுக்கு அன்பு என்பதே பொருள் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், அன்பு என்ற அர்த்தத்திலேயே சேரி என்ற சொல்லை தாம் பயன்படுத்தியதாகவும் குஷ்பு விளக்கமளித்துள்ளார்.