பிரபல கன்னட திரைப்பட தயாரிப்பாளர் தூக்கிட்டு தற்கொலை.. திரையுலகினர் அதிர்ச்சி!

 

பிரபல கன்னட திரைப்பட தயாரிப்பாளரும், தொழிலதிபருமான சௌந்தர்ய ஜெகதீஷ் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2008-ல் வெளியான ‘மஸ்த் மஜா மாடி’ படத்தின் மூலம் கன்னட சினிமாவில் தயாரிப்பாளராக அறிமுகமானவர் செளந்தர்ய ஜெகதீஷ். இவர், ‘அப்பு & பப்பு’, ‘சிநேகிதரு’ மற்றும் ‘ராம்லீலா’ உள்ளிட்டப் பல படங்களை கன்னடத்தில் தயாரித்துள்ளார். இவர் படங்களை தயாரிப்பது மட்டுமல்லாது, தொழிலிலும் கவனம் செலுத்தி வந்தார்.

சுமார் 55 வயதான சௌந்தர்ய ஜெகதீஷ் நேற்று பெங்களூருவில் உள்ள அவரின் வீட்டில் அதிகாலை 4 மணி அளவில் தற்கொலை செய்து கொண்டார். ஆனால் இவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் 9.40 மணிக்கு தான் அவரின் குடும்பத்தினருக்கு தெரிய வந்துள்ளது. உடனடியாக சௌந்தர்ய ஜெகதீஷை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் இவர் ஏற்கனவே இருந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்த தற்கொலை தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு பின் வழக்கு பதியப்பட்டுள்ளது. எதற்காக ஜெகதீஷ் தற்கொலை செய்துகொண்டார். இவருக்கு வேறு எதுவும் பிரச்சைனைகள் இருக்கா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால் தற்கொலைக்கான உண்மையான காரணம் என்னவென்று தெரியவில்லை. இருப்பினும் சமீபகாலமாக மன உளைசச்சல் காரணத்திற்காக மருந்துகளை எடுத்துக்கொண்டு வந்தார் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இவருக்கு பொருளாதார ரீதியாகவும், உடல் ரீதியாகவும் எந்தவொரு பிரச்சனையும் இல்லை என்று ஜெகதீஷின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இதனால் ஜெகதீஷின் தற்கொலை மர்மமாக இருந்து வருகிறது. இவருக்கு மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். சமீபத்தில் தான் மகளுக்கு திருமணம் செய்து வைத்துள்ளார் ஜெகதீஷ்.

ராஜாஜிநகரில் அமைந்துள்ள ஜெட்லாக் ரெஸ்டோபார் நிறுவனம் ஜெகதீஷுக்கு சொந்தமானது. இங்கு நடிகர் தர்ஷன் நடித்த ‘காட்டேரா’ படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் நள்ளிரவு 1 மணிக்கு மேல் பார்ட்டி நடந்ததாக ஜெகதீஷ் மற்றும் பலர் மீது கடந்த ஜனவரி மாதம் வழக்குப் பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.