கார்த்தி நடிக்கும் ‘சர்தார் 2’ படத்தில் இணைந்த கன்னட நடிகை

 

கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் ‘சர்தார் 2’ படத்தில் நடிகை ஆஷிகா ரங்கநாத் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

கார்த்தி நடிப்பில் ‘சர்தார்’ படம் கடந்த 2022-ம் ஆண்டு வெளியாகி வரவேற்பைப் பெற்றது. தீபாவளியை முன்னிட்டு வெளியான இந்தப் படம் இதுவரை ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. சர்தார் படத்தில் கார்த்தியுடன் லைலா, ரஜிஷா விஜயன், ராஷி கண்ணா, யூடியூப் பிரபலம் ரித்விக் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார். பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரித்திருந்தது.

தேசத்துரோகி என்று முத்திரை குத்தப்பட்ட உளவாளி, உண்மையில் தேசநலனுக்காக எத்தகைய தியாகங்களைச் செய்கிறார் என்பதே படத்தின் கதை. இதில் அப்பா- மகன் என இரட்டை வேடத்தில் கார்த்தி நடித்திருந்தார். இந்த படத்தின் இரண்டாம் பாகம் வெளியாவது ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் நிலையில் கடந்த ஜூலை 12-ம் தேதி இந்த படத்தின் பூஜை சிறப்பாக நடைபெற்று முடிந்தது. 

ஏற்கனவே இந்த படத்தில் நடிக்க எஸ்.ஜே.சூர்யா, மாளவிகா மோகனன் இணைந்தது தொடர்ந்து இப்போது இதில் மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஆஷிகா ரங்கநாத் இணைந்துள்ளார் என அறிவித்துள்ளனர். இவர் கடந்த 2016-ம் ஆண்டு கன்னடத்தில் வெளியான 'கிரேசி பாய்' திரைப்படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ளார்.