சம்மரில் மிரட்ட வரும் காஞ்சனா 4.. சம்பவம் செய்ய தயாராகும் ராகவா லாரன்ஸ்!
காஞ்சனா 4 திரைப்படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2007-ல் ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் வெளியான ‘முனி’ திரைப்படம் அவருக்கு மிக முக்கிய படமாக மாறியது. ராகவா லாரன்ஸ், ராஜ்கிரண், வேதிகா, வினுச்சக்கரவர்த்தி மற்றும் கோவை சரளா உள்ளிட்ட பலர் அந்த படத்தில் நடித்தனர். அதன் பின்னர் காஞ்சனா படத்தை 2011-ம் ஆண்டு ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்தார். அந்த படத்தில் ஃபிளாஷ்பேக் போர்ஷனில் திருநங்கையாக சரத்குமார் நடித்து மிகப்பெரிய வெற்றிப் படமாக அதை மாற்றினார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் காஞ்சனா படத்தை வெளியிட்டது.
காஞ்சனா 2 மற்றும் 3ம் பாகங்களை ராகவா லாரன்ஸ் உடன் இணைந்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வெளியிட்டது. இந்நிலையில், காஞ்சனா 4 படத்தை உருவாக்க முடிவெடுத்துள்ள ராகவா லாரன்ஸ் இந்த முறை சன் பிக்சர்ஸ் உடன் இணையப் போவதில்லை என்கிற தகவல்கள் வெளியாகி உள்ளன.
சமீபத்தில் சுந்தர் சி இயக்கி நடித்த அரண்மனை 4 திரைப்படம் இந்த ஆண்டு வெளியான தமிழ் படங்களில் அதிகபட்சமாக 100 கோடி வசூலை ஈட்டி சாதனை படைத்துள்ளது. மீண்டும் சினிமா ரசிகர்கள் காமெடி பேய் படங்களுக்கு ஆதரவு கொடுப்பதை தொடர்ந்து, தற்போது காஞ்சனா 4 திரைப்படத்தை இயக்கும் பணியில் மும்மரமாக இறங்கியுள்ளார் ராகவா லாரன்ஸ்.