பிக்பாஸில் இருந்து அதிரடியாக விலகும் கமல்? அடுத்த தொகுப்பாளர் இவரா?

 

பிக்பாஸ் நிகழ்ச்சியின் தொகுப்பாளர் பொறுப்பில் இருந்து நடிகர் கமல்ஹாசன் விலக முடிவு செய்து உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 2017-ம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இதுவரை 6 சீசன்கள் முடிந்துள்ளன. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் தொடர் மிகப்பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியை முன்னணி நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பிராந்திய மொழிகளிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

இதில் கலந்து கொண்ட பிரபலங்களுக்கு பிரபலத்தோடு சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்பும் கிடைப்பதால், சினிமாவில் நடிக்க விரும்பும் நடிகர்களின் பார்வை மொத்தமும் நிகழ்ச்சி போட்டியாளர்களின் தேர்வு பட்டியலின் பக்கம் சென்றது. இந்த நிலையில் பிக்பாஸ் 7-வது சீசன் கடந்த அக்டோபர் 1-ம் தேதி தொடங்கியது. இந்த சீசனில் பிக்பாஸ் வீட்டில் 2 வீடுகள் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த சீசனையும் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கி வருகிறார். இதற்கு முந்தைய சீசன்களைப் போல் இல்லாமல் இந்த சீசனில் ஒரு தொகுப்பாளராக கமல்ஹாசன் கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறார். பிரதீப்புக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றியது முதல் கடந்த வாரம் நிக்சன் - நிவிஷா விவகாரத்தை கண்டுகொள்ளாமல் கடந்து சென்றது வரை கமல்ஹாசன் சந்தித்த சர்ச்சைகள் ஏராளம் உள்ளன.

இதனால் கமல்ஹாசனின் பெயரும் டேமேஜ் ஆகி வருகிறது. குறிப்பாக சமூக வலைதளங்களில் கமலை ஏராளமானோர் வறுத்தெடுத்து வருகின்றனர். இந்த ஷோவிலேயே தப்பை தட்டிக்கேட்காத நீங்கள் அரசியலுக்கு வந்தால் என்ன செய்வீர்கள் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த நிகழ்ச்சியால் கமல்ஹாசனின் அரசியல் வாழ்க்கையும் பாதிக்கப்படும் சூழல் உருவாகி வருகிறது. இதனை கருத்தில் கொண்டு கமல்ஹாசன் அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளாராம்.

அதன்படி இந்த சீசனுடன் பிக்பாஸில் இருந்து விலக கமல்ஹாசன் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. பிக்பாஸில் இருந்து விலகி அரசியலில் தன்னுடைய கவனத்தை செலுத்த அவர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அநேகமாக இதுவே கமல்ஹாசனின் கடைசி சீசனாக இருக்கும் என நம்பத்தகுந்த வாட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஒருவேளை கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகிவிட்டால் அவருக்கு பதில் சிம்புவை களமிறக்க வேண்டும் என கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.