நடிகர் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக நடிக்கும் ஜெயம் ரவி!

 

சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தில் வில்லனாக நடிக்க ஜெயம் ரவி சம்மதம் தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அயலான், மாவீரன் படங்களை தொடர்ந்து கடந்த அக்டோபர் 31-ம் தேதி திரையரங்குகளில் ரிலீசான ‘அமரன்’ படம் மிகப்பெரிய வெற்றியையும் வரவேற்பையும் வசூலையும் பெற்றுள்ளது. மறைந்த ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் பயோ-பிக்காக வெளியான இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி இணைந்து மிகச்சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். இந்தப் படத்தின் வரவேற்பு சிவகார்த்திகேயனுக்கு மிகப்பெரிய உற்சாகத்தை கொடுத்துள்ளது.

இந்தப் படத்தை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் அடுததப்படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக சிபி சக்ரவர்த்தி, நெல்சன் திலீப்குமார் ஆகியோருடன் கூட்டணி அமைக்கவுள்ளதாக சிவகார்த்திகேயன் கூறியுள்ளார். அதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிக்கும் 25-வது படத்தை இயக்கவுள்ளார் சுதா கொங்காரா. அதனை டான் பிக்சர்ஸ் நிறுவனம் முதல் பிரதி அடிப்படையில் தயாரிக்கவுள்ளது.

சிவகார்த்திகேயன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பாளராக பணிபுரியவுள்ளார். இது அவருடைய இசையில் உருவாகும் 100-வது படமாகும். இதில் வில்லனாக நடிக்க பல்வேறு முன்னணி நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது படக்குழு. இறுதியாக ஜெயம் ரவி நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார். அவருடைய கதாபாத்திரம் புதிதாக இருக்கும் என்கிறது படக்குழு.

படப்பிடிப்பு தேதிகள் அனைத்தும் முடிவானவுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதாக உறுதியளித்துள்ளார் ஜெயம் ரவி. இதில் நடிப்பதற்கு ஜெயம் ரவிக்கு பெரும் தொகை சம்பளமாக கொடுக்கப்படவுள்ளது. சூர்யா நடிக்கவிருந்த ‘புறநானூறு’ படத்தை தான் இப்போது சிவகார்த்திகேயனை வைத்து தொடங்கவுள்ளார் சுதா கொங்காரா. சூர்யா - சுதா கொங்காரா இருவருக்கும் ஏற்பட்ட மனக்கசப்பில் அவர்கள் மீண்டும் இணையவில்லை என்பது கவனிக்கத்தக்கது.